அலுப்பாகவோ அயர்ச்சியாகவோ பதற்றமாகவோ கழியும் நாட்கள் எல்லோருக்குமே வரத்தான் செய்கின்றன. எதற்காக இவ்வளவு மனச் சோர்வு என்பதே புரியாமல் புலம்பும் நாட்களும் உண்டு. இதுதான் சிக்கல் என்று அடையாளம் கண்டுவிடும் பட்சத்தில் அதிலிருந்து ஓரளவேணும் மீண்டு விடலாம். ஆனால், சிக்கல் புரியாமலேயே மனக் குழப்பத்துடன் சுற்றித் திரியும் நாட்கள்தாம் மிகவும் கொடுமையானவை.
இத்தகைய மனநிலை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதற்குச் சமூக ஊடகங்களும் ஒரு காரணம். சமூக ஊடகங்கள் மூலம் நம்மை விடவும் செழிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்பவர்களைப் (பல நேரம் போலித்தனமாகக் காட்டிக்கொள்பவர்கள்) பார்த்துப் பெருமூச்சுவிடுகிறோம். போதாததற்கு ஊர் உலகத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்த செய்திகளை எல்லாம் அவை நம்மிடம் வந்து கொட்டுகின்றன.
மனக் குழப்பம் நிறைந்த நாட்களைக் கடப்பது எப்படி?
1. சிக்கலில் இருந்து ஓரடி விலகி நில்லுங்கள்.
2. ஆழமாகவும் நிதானமாகவும் சுவாசியுங்கள்.
3. தயார் நிலையில் இருப்பதாக உங்களுக்குள் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நிலைமையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
4. கனிவுடன் உங்களையே நீங்கள் அவதானியுங்கள். உங்களுக்கு நீங்கள் தர வேண்டிய முக்கியத்துவத்தை அபகரித்துக்கொள்ளும் நபரோ சூழலோ சிந்தனையோ காலக்கெடுவோ உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். இதுபோன்ற புறச் சிக்கல்களிடம் நம்மைப் பறிகொடுப்பதாலேயே பல நேரம் நம்மையே நாம் இழந்துவிடுகிறோம்.
5. “இப்போது நான் எப்படி உணர்கிறேன்?” என்று கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, “இப்போது நான் எவ்வாறு உணர்ந்தால் நன்றாக இருக்கும்?” என்று கேட்டுப் பாருங்கள். அவற்றைப் பட்டியலிடுங்கள். அவற்றிலிருந்து தற்போது தேவைப்படும் மூன்று விஷயங்களைத் தேர்ந்தெடுங்கள்.
6. ‘நான் எதை நினைக்க வேண்டும்?’, ‘நான் எதைச் செய்ய வேண்டும்?’, ‘நான் எதைக் கைவிட வேண்டும்?’, ‘நான் எதை மாற்றிக்கொள்ள வேண்டும்?’ என்னும் கேள்விகளைச் செயல் திட்டமாக மாற்றுங்கள்.
7. ஒவ்வொரு படியாக நிதானமாக முன்னேறுங்கள். அதிகப்படியான அழுத்தமோ அவசரமோ நிர்ப்பந்தமோ உங்களுக்கே நீங்கள் தர வேண்டாம்.
8. உங்களுடைய நலனைப் பாதிக்கும் பழக்கவழக்கங்களை, நபர்களை உங்களை அண்ட விடாதீர்கள். எப்போதுமே மாற்றத்தை ஏற்படுத்த வல்லது நம்முடைய தேர்வுகளே.
9. ஒட்டாத விஷயங்களைப் பற்றிக்கொள்ள வேண்டாம். எதுவொன்றையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும்போது மாற்றத்தைக் காணத் தவறிவிடுகிறோம்.
10. நிதானமாகவும் சீராகவும் செயல்பட்ட பிறகும் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிட்டால் அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். எப்போதுமே ஏறுமுகத்தில்தான் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நம்மை நாமே மாற்றிக்கொள்ளச் சறுக்கல்களும் சில நேரத்தில் உதவும்.
கற்றுக்கொள்ளவும் மேம்படவும் கைகொடுப்பவை அசௌகரியங்களே. ஆனால், அத்தகைய அசெளகரியமான சூழலை எதிர்கொள்ளாமல் சினிமா, சமூக ஊடகம், உணவு அல்லது குடி, போதை, சூதாட்டம் போன்ற பழக்கங்களில் நம்மைத் திசை திருப்ப முயல்வது என்பது ஆரோக்கியமான மாற்று அல்ல. அது நாளடைவில் கேடு விளைவிக்கவே செய்யும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகள்
1. நீங்கள் சமநிலையில் இருக்கிறீர்களா என்பதைச் சுதாரிப்பாகக் கவனியுங்கள். தடுமாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மனக் குழப்பத்தைக் கடப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குங்கள்.
2. உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணி வாழ்க்கையிலும் மேம்படுவதற்கான வாழ்க்கை முறையை உருவாக்குங்கள். அதில் ஆரோக்கியமான உறவுகளுக்கும் பொழுதுபோக்குக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
3. அவசரம் வேண்டாம். உடல், மன ஆரோக்கியத்துக்கு நிதானம் அத்தியாவசியம்.
‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், |
தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.