நான் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துவருகிறேன். அண்மை காலமாக மாணவர்களிடத்தில் உத்வேகமும் உற்சாகமும் குறைந்துவருவதைக் கவனித்துவருகிறேன். காதல் உறவுகளில் சிக்கிக்கொள்வது, ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுகளில் மூழ்கிக்கிடப்பது என்பது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அவர்கள் மீள முடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய மாணவர்களின் நடத்தையில் மாற்றம் கொணர ஓர் ஆசிரியராக நான் என்ன செய்யலாம்?
- பெயர் விளியிட விரும்பாதவர்.
இளையத் தலைமுறையினரின் நடத்தையிலும் அவர்கள் தேர்வு செய்யும் விஷயங்களிலும் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காகக் காதல் விவகாரத்திலும் தொழில்நுட்பக் கருவிகளிலும் அவர்கள் மாட்டிக்கொண்டிருப்பதால் அவர்கள் சீரழிவதாகக் கருதத் தேவை இல்லை. வழக்கமான வழிமுறைகளைக் கடந்து மாணவர்களை எப்படி ஊக்கப் படுத்தலாம் என்று யோசிக்கலாமே!
எதிர்பாராத விதமாக அதிகப்படியான மாற்றங்களை இளம் தலைமுறையினர் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கணினி விளையாட்டுகளில் திளைத்துக் கிடப்பது புதியவற்றைத் தெரிந்துகொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அனுபவங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
ஆனால், மறுபுறம் இவர்கள் மதிப்பெண் உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக நடத்தப்படுவதால் நிஜ உலகில், களத்தில் இறங்கி அனுபவங்களைப் பெறுவது, செயல்வழியில் கற்றுக்கொள்வது என்பது அருகிவிட்டது. மூளை வளர்ச்சிக்கு இத்தகைய வெளிப்பாடு அத்தியாவசியம். இந்த வாய்ப்புகளெல்லாம் மறுக்கப்பட்டவர்கள் எதற்கெடுத்தாலும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு, பாராட்டுகள் பட்டுவாடா செய்யப்படுகிறார்களே தவிர, அவர்களுக்கு உள்ளூரத் திருப்தி கிடைப்பதில்லை.
ஊழல் மலிந்த அரசியல்வாதிகளும் ஊக்கமளிக்க முடியாத ஆசிரியர்களும் அரவணைப்பு காட்ட நேரமில்லாத பெற்றோர்கள் உள்ளிட்டவர்களே இவர்கள் முன்னால் இருக்கும் முன்மாதிரிகள். போதாததற்கு மனதைச் சிதறடிக்கும் திரைப்படங் களும் அத்தனையும் பண்டமாக மாற்றும் விளம்பரங்களும் இவர்களை வெறுமைக்குள் தள்ளுகின்றன.
விளையாட்டு, ஓவியம், இசை, மேடை நாடகம், பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் இலக்கின்றி இயல்பாக ஈடுபடும் வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்பட்டதே இந்தத் தலைமுறையினருக்கு விடுக்கப்பட்ட சாபம். போட்டியும் வெற்றியும் இவர்களைத் துரத்துகின்றன. வெற்றியாளரா அல்லது தோல்வியாளரா என்பதைப் பொருத்தே அத்தனையும் தீர்மானிக்கப்படும் என்றால், அங்கு உத்வேகமும் உற்சாகமும் ஆழமாகக் காயப்படத்தான் செய்யும்.
என்ன செய்யலாம்?
# கூடுமானவரை குழுக்களாக ஒன்றுகூடிச் செயல்பட இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பது பெற்றோரின், ஆசிரியரின் கடமை. ஒற்றைக் குழந்தைதான் இன்று பெரும்பாலான வீடுகளில் இருப்பதால் இது அத்தியாவசியம். அதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அக்கறை சார்ந்த கண்டுபிடிப்புத் திட்டங்களில் ஈடுபட உந்தித்தள்ளுங்கள்.
# குழுவாக இணைந்து செயல்படும்போது சவால்களை எதிர்கொள்ளப் பழகுவார்கள். அதேநேரத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் ஏதுமின்றி உண்மையான மனத் திருப்திக்காகக் குழுப் பணிகளில் செயலாற்றும்போது உத்வேகத்தின் உன்னதத்தை அவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
# தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான களம் கிடைக்கும்போது உற்சாகம் கொப்பளிக்கும். அதேநேரத்தில் மாற்றுக்கருத்துகளையும் செவிமடுத்துக் கேட்கப் பழகும் போதும் சக மனிதர்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் வாழ்க்கை குறித்த ஆரோக்கியமான பார்வையும் மலரும்.
# முக்கியமாக வெற்று மென்திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளில் பங்கேற்பதைவிடவும் தன்னைத் தானே அறியும் வாய்ப்பை ஆழமாக வளர்க்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள். இதுதவிர வாழ்க்கையில் வெற்றிகண்ட தலைவர்கள், மேலாண்மை அறிஞர்கள் பலரின் பதிவுகளும் கருத்தரங்குகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இதன்மூலம் அதி நவீனத் தொழில்நுட்பப் பிரியர்களும் பலனடையலாம்.
தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.