நண்பர்கள் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாகிக் கொண்டேபோகிறது. இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன். இதைச் சமாளிக்க என்ன செய்யவேண்டும்?
- வள்ளியம்மை.தே, காரைக்குடி, சிவகங்கை
அனைவருக்கும் உறவுகள் தேவைப்படுகின்றன. எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகக்கூடியவரோ சகஜமாகப் பழகத் தயங்குபவரோ அல்லது மிதமாகப் பழகக்கூடியவரோ… யாராக இருந்தாலும் அவரவரின் வாழ்க்கையின் போக்கை, அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளும் தீர்மானிக்கவே செய்கின்றன. அதிலும் பதின்பருவத்தில் சேரும் நண்பர் குழாம்தான் நம்முடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆகையால் நீங்கள் செய்யக்கூடியவை:
# நண்பர்கள் கிடைக்க நீங்கள் முயன்றிருக்கிறீர்களா என்ற கேள்வியை உங்களிடமே கேளுங்கள். படிப்பதிலும் மற்ற விஷயங்களிலும் அதிகப்படியான நேரம் செலவழித்தபடி இருந்துவிட்டு நட்பை உருவாக்கத் தவறி இருந்தால், அதில் மாற்றம் ஏற்படுத்துங்கள்.
# நண்பர்கள் கிடைக்க முதலில் நாம் நல்ல நண்பராக இருக்க வேண்டும். உங்களுடைய வயதைச் சேர்ந்தவர்களோடு பேசிப் பழகுங்கள். பொதுவான விருப்பங்கள் கொண்டவர்தான், நல்ல நண்பர்களாக முடியும் என்றில்லை. அதைவிடவும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளைக் கொண்டவர்கள் நல்ல நண்பர்களாக மாற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
# நட்பில் உடனடி நெருக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். நல்லுறவுகள் மலரக் காலம் பிடிக்கும். சமூக ஊடகங்களைப் போல உடனடி ‘லைக்ஸ்’, ‘ஃபாலோயர்ஸ்’ நிஜ வாழ்க்கையில் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொண்டு மரியாதையுடன் நண்பர்களை அணுகுங்கள்.
# நீங்கள் நீங்களாகவே இருங்கள். நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுடைய அடிப்படைக் குணங்களைத் தக்கவைத்துக்கொண்டு, அதற்கேற்ற மாதிரி நண்பர்களைத் தேடும்போது சரியான நபர்களை உங்களால் அடையாளம் காண முடியும். ஆனால், மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக உங்களை மாற்றிக்கொள்ளத் தொடங்கினால் போலியான உறவுகள்தான் மிஞ்சும்.
# உங்களை நேசிப்பதில் பயணம் தொடங்கட்டும். உங்களுக்கு நீங்கள் மதிப்பளியுங்கள், சமநிலையான வாழ்க்கை வாழத் தேவையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடியுங்கள்.
# அளவுக்கு அதிக மாக எதைச் செய்தாலும் அது சிக்கலைத்தான் ஏற்படுத்தும். ஆகை யால் நண்பர்களைக் கண்டடைந்த பின்பும் அவர்களோடு மிதமான நேரம் செலவிடப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நிதானம் நெடுந்தூரப் பயணத்துக்குக் கைகொடுக்கும்.
நான் திருநெல்வேலியில் வசிக்கிறேன். என்னுடைய மகன் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் சமீபத்தில் தான் வேலையில் சேர்ந்துள் ளார். அவருடைய நடத்தையில் திடீர் மாற்றங்கள் தெரிகின்றன. என்னிடம் பேச மறுக்கிறார். விலகிப்போகிறார். அவருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பெருநகரத்தில் புதிய அனுபவங்கள். இத்தகைய சூழலில் உங்களுடைய மகனின் சுபாவத்தில் மாற்றங்கள் வெளிப்படுவது இயல்புதான். தனக்கு இருக்கும் பணிச் சுமையை, அழுத்தத்தைக் கையாளுவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அவர் உங்களிடம் பேசுவதைக் குறைத்திருக்கக்கூடும்.
குழந்தைகள் என்றென்றும் மாறாமல் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சிலநேரம் குழந்தைகளின் போக்கிலேயே அவர்களை விட்டு மீண்டும் நம்மிடம் வரப் பொறுத்திருப்பது அவசியம். ஒருவேளை தகாத நட்பு, தீய பழக்க வழக்கங்களில் அவர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் உங்களுக்கு இருக்குமானால், நிபுணர்களின் உதவியை நாடலாம்.
அதற்கு முன்னதாகக் குழந்தை வளர்ப்பில் உங்களுடைய அணுகுமுறை எப்படிப்பட்டதாக இதுவரை இருந்திருக்கிறது என்பதை நீங்கள் முதலில் அலசிப் பார்ப்பது நல்லது. எல்லா முடிவுகளையும் நீங்களே எடுப்பது, கடுமையான தண்டனைகளை விதிப்பது, குறைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா?
ஆமாம் என்றால், உங்களுடைய மகன் இப்போது உங்களிடமிருந்து தள்ளி இருப்பது உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய ஆளுமையைத் தானே உருவாக்கிக்கொள்ளத்தான் என்று புரிந்துகொள்ளுங்கள். அவர் ஆபத்தில் இல்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டு அவர் இஷ்டம்போல் செயல்பட அனுமதியுங்கள். நீங்கள் சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக அல்லாமல் உங்களுடன் உரையாட அவருக்குத் தேவையான இடத்தைக் கொடுக்கப் பழகுங்கள். உங்களுடைய பழைய அணுகுமுறை இனி வேலைக்கு ஆகாது என்பதைப் புரிந்துகொண்டு, உங்களுடைய அணுகுமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து யோசியுங்கள்.
‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், |
தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.