அன்புள்ள குழலி,
சிந்துவெளி பத்தி நீ எழுதின ஒவ்வொரு கடிதத்தைப் படிக்கும்போதும் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவே இல்லாமல் போய்க்கிட்டிருக்கு. நாணயமில்லாத பண்டமாற்று முறையில், யாரா இருந்தாலும் உழைச்சு உருவாக்குன பொருளைத்தான் பண்டமாற்று செஞ்சிருக்க முடியும். அதே மாதிரி உற்பத்தியாகுற எல்லாத்துக்கும் வரி போட்டு அரசு வருமானத்தைப் பெருக்கும் ராஜாவுக்குப் பதிலா, மக்களின் உழைப்பால் கிடைத்த எல்லாத்தையுமே மக்களின் அடிப்படை வசதிகளுக்காகச் செலவு செய்யுற ஊர் நிர்வாகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் செயல்பட்டிருக்கு. மக்களோட மக்கள் மோதி செத்துப் போறதுக்கு ஆயுதங்கள் தயாரிச்சு, போருக்காகவே பல காலத்தைச் செலவழிக்காம ஊர்த் தலைவர்கள் வாழ்ந்திருக்காங்க. இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா இன்னைக்குக் கனவு மாதிரி இருக்கு. ஆனா, இது எல்லாத்தையுமே சிந்துவெளி மக்கள் 4,000 வருடங்களுக்கு முன்னாலேயே சாத்தியப்படுத்தி இருக்காங்கன்னா, அவங்க அறிவில் சிறந்தவங்களாத்தான் இருந்திருக்கணும்.
சிந்துவெளி நாகரிகத்தின் முடிவுக் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அடுத்து எதைப் பத்திச் சொல்லப் போற?
அன்புடன்,
செழியன்
அன்புள்ள செழியா,
சிந்துவெளிக்கும் நமக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளைப் பார்த்தோம். வரலாற்றில் சிந்துவெளி சிறப்பிடம் பெற்றதற்கு அந்த நாகரிகத்தின் நகரமைப்புகள் முக்கியக் காரணம். அடுத்து நாம பார்க்கப் போறது தமிழகத் தொன்மை நகரங்கள் பத்தி. தமிழகத்திலும் சங்க காலத்திலேயே தொன்மை நகரங்கள் வளர்ந்து செழித்திருந்துள்ளன. என் சொந்த ஊரான மதுரை அதுக்குச் சிறந்த உதாரணம். சங்க காலம்கிறதைக் குறைந்தபட்சம் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக்கொள்ளலாம்.
அன்றைக்குத் தமிழகம் தொண்டை நாடு (வட தமிழகம்), சோழ நாடு (காவிரி பாயும் மத்திய தமிழகம்), பாண்டிய நாடு (தென் தமிழகம்), சேர நாடு (தற்போதைய கேரளம்) எனப் பிரிந்திருந்தது. அந்த நாடுகளில் முக்கியத்துவம் பெற்ற பல நகரங்கள் இருந்த போதிலும் தொண்டை நாட்டில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், சோழ நாட்டில் புகார், உறையூர், பாண்டிய நாட்டில் மதுரை, கொற்கை, சேர நாட்டில் முசிறி, வஞ்சி ஆகிய நகரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்த நகரங்கள் அடிப்படையில் இரண்டு வகைகளாக இருந்துள்ளன. புகார், மாமல்லை, கொற்கை, முசிறி ஆகியவை துறைமுக நகரங்கள்; காஞ்சிபுரம், உறையூர், மதுரை, வஞ்சி ஆகியவை முக்கிய நகரங்களாக-தலைநகரங்களாகத் திகழ்ந்தன.
சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி போன்ற சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைய அயல்நாட்டுப் பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள், தொல்லியல் கண்டறிதல்கள் ஆகியவற்றிலிருந்து இந்த நகரங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
உனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கு. கொஞ்சம் பொறுத்திரு, அடுத்த வாரம் சொல்றேன்.
அன்புடன்,
குழலி
அடையாளமும் கொடிகளும்
புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் முதல் பருவ நூலில் ‘தமிழகத் தொன்மை நகரங்கள்’ குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. பண்டைத் தமிழகத்தின் நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றிருந்தன. அந்தச் சிறப்புகள்:
சோழ நாடு சோறுடைத்து
அதன் கொடி புலிக்கொடி;
பாண்டிய நாடு முத்துடைத்து
அதன் கொடி மீன் கொடி;
சேர நாடு வேழமுடைத்து (யானை)
அதன் கொடி வில்கொடி;
தொண்டை நாடு – சான்றோருடைத்து
அதன் கொடி இடபக் கொடி (காளை)
யாருக்கு உதவும்?
போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்
கட்டுரையாளர் தொடர்புக்கு:
valliappan.k@thehindutamil.co.in