குதிரைதான் மனிதரின் முதல் போக்குவரத்துப்புரட்சி. ஆனாலும் எவ்வளவு நாளைக்குத்தான் குதிரையைக் கட்டி மேய்ப்பது ? எந்த ஒரு உயிரினமும் இழுக்கத் தேவையில்லாமல் தானாக நகரும் ஒரு வாகனத்தைக் கண்டுபிடிக்க கார்ல் பென்ஸ் (1844–1929) முயன்றார். அவருக்கு நிதி உதவி செய்து அவரின் வியாபாரக் கூட்டாளியாக பெர்தா (1849-1944) எனும் பெண் சேர்ந்தார்.
அந்தக் காலத்தில் ஜெர்மனியில் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடும் பெண்களுக்கு கல்யாணமானால் அந்த உரிமை போய்விடும். பென்ஸ் எப்படி மயக்கினாரோ? அவரைக் கல்யாணம் செய்து கொண்டு பெர்தா தன்னை நட்டப்படுத்திக் கொண்டார். இருவரும் சேர்ந்து ஒரு ஆட்டோமொபைலைப் படைத்தனர். புதிய வாகனம் வளர வளர அவர்களுக்கு ஐந்து புதிய வாரிசுகளும் பிறந்தனர்.
டிரைவிங் படிக்காத டிரைவர்
குதிரை இல்லாத ஒரு குதிரை வண்டியை 1885-ல் அவர்கள் உருவாக்கி முடித்தனர். அது மரத்தால் ஆனது. அதில் குதிரை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சக்கரம் அதிகமாக இருந்தது. அந்த வண்டியில் 2.5 குதிரை சக்தி கொண்ட இன்ஜின் ஒன்று இருந்தது. ஸ்பார்க் பிளக், கிளட்ச், கியர், ரேடியேட்டர் ஆகியவற்றையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை அரசிடம் பதிவுசெய்தனர்.
ஆனாலும் பென்ஸ் அதை யாரும் வாங்க மாட்டார்கள் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். அவருக்கு நம்பிக்கை ஊட்ட நினைத்தார் அந்த வீராங்கனை. ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டுத் தனது அம்மா வீட்டுக்குப் பெரிய பையன்கள் இரண்டு பேரை மட்டும் கூட்டிக்கொண்டு 1888 ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு சாகசப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
அவரது அம்மா வீடு 106 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பாங்கான ஊரில் இருந்தது. பெட்ரோல் பங்குகள், மெக்கானிக் கடைகள், உதிரிபாக கடைகள் எதுவும் உருவாகாத காலம். டிரைவிங் இன்ஸ்ட்டியூட் இல்லாத காலம். எனவே அவரே டிரைவிங்கையும் உருவாக்கினார்.
ஒரு அவசர கால பாதுகாப்புக்கான எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அவர் பயணம் செய்தார். உண்மையில் தங்களின் வாகனம் பயணத்துக்கு உதவுமா? எனச் சோதிக்கவும், தங்களது கண்டுபிடிப்பைப் பற்றி விளம்பரப்படுத்தவும் அவர் விரும்பினார்.
உலகின் முதல் மெக்கானிக்
பாதி வழியில் இன்ஜின் சூடாகியதும் நிறுத்திக் கிராமங்களின் கிணறுகளில் தண்ணீர் எடுத்து ஊற்றினார். பிரேக் அறுந்தது. ஒரு செருப்பு தைப்பவரை வைத்து அதைச் சரி செய்தார். செயின் அறுந்தது. ஒரு கொல்லரிடம் அதைச் சரி செய்தார்.
எரிபொருள் தீர்ந்துபோனது. ஒரு மருந்துக்கடைக்குப் போனார். சட்டையில் கறையை நீக்க அந்தக் காலத்தில் பெட்ரோலியப் பொருள்கள் சிறிய பாட்டில்களில் விற்கப்படும். அதற்காக அந்தக் கடையில் பெட்ரோலியப் பொருள் சில லிட்டர் இருந்தது. அதை மொத்தத்தையும் வாங்கினார். ஒரு ஒயருக்கு கார்டரை இன்சுலேட்டர் ஆகப் பயன்படுத்தினார்.
மலை மேட்டில் வண்டி ஏறவில்லை.ஒரு விவசாயி உதவியோடு ஏற்றினார்.
மேம்படுத்திய விஞ்ஞானி
குதிரை இல்லாமல் தானே நகர்ந்து ஒரு வண்டி வருவதைப் பார்த்த மக்கள் பேயைப் பார்த்த மாதிரி தெறித்து ஓடினார்கள். அதிகாலையில் புறப்பட்ட அவர் நன்கு இருட்டிய பிறகு போய்ச் சேர்ந்தார். வந்து சேர்ந்தேன் எனக் கணவருக்குத் தந்தியடித்தார்.மறுநாள் அதே போல் திரும்பினார். எதிர்பார்த்ததைவிட அதிகமாக இந்தப் பயணம் உலக அளவில் பரபரப்பான செய்தி ஆனது.
பயணத்தின் அனுபவங்களிலிருந்து பல ஆலோசனைகளைச் சொல்லி மேலும் அந்த வாகனத்தை மேம்படுத்தச் செய்தார்.
மேடான பகுதிகளில் ஏறுவதற்குக் கூடுதல் கியர் அமைக்கப்பட்டது. அவர் எதிர்பார்த்ததைப் போலவே அந்த வாகனத்துக்கு வியாபார ஆர்டர்கள் கிடைத்தன.
கடைசிக்கால மரியாதை
ஜெர்மனியில் புகழ்பெற்ற தொழிற்நுட்பப் பல்கலைக்கழகம் ஆட்டோமொபைலைக் கண்டுபிடித்த சாதனைக்காக பென்ஸுக்கு 1914-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
ஆனால் பெர்தாவுக்கு எந்த மரியாதையும் தரப்படவில்லை.பல்கலைக்கழகத்தின் மனச்சாட்சி வேலை செய்ய ரொம்ப காலம் தேவைப்பட்டது. பெர்தாவின் 95 -ம் பிறந்த நாள் 1944-ல் வந்தது. லேட்டாக அறிவித்தாலும் லேட்டஸ்டான முறையில் அவரது பிறந்த நாளில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் கவுரவ செனட்டர் ஆகவே அறிவிக்கப்பட்டார்.
அதற்காகவே வைராக்கியமாகக் காத்திருந்ததைப் போல இரண்டாவது நாளில் அவர் காலமாகிவிட்டார்.