இணைப்பிதழ்கள்

வேதனையிலிருந்து சாதனை: சாதனையாளர் ஜானி டெவாய்ன் விம்ப்ரே

கபி

துன்பங்களையே பெரிதும் அனுபவித்த ஒரு சிறுவன் தனது தன்னம்பிக்கை மிக்க ஆற்றலால் சமூகத்தால் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்வது எவ்வளவு மேன்மையானது!

துயரங்களிலிருந்து நம்பிக்கை

அத்தகையவராக இன்று உலகில் வலம்வருகிறார் ஜானி டெவாய்ன் விம்ப்ரே. அவர் இன்று தன்னம்பிக்கை தரும் பேச்சாளராக இருக்கிறார். அவரது தன்னம்பிக்கை ஊட்டல் துயரமான சொந்த அனுபவங்களிலிருந்து வெளிப்படுவதால் மற்ற பேச்சாளர்களிடமிருந்தும் அவர் தனித்து நிற்கிறார்.

இளமையும், ஊக்கமும், பல திறன்களும் கொண்ட, வெற்றிக்கான பயிற்சியாளராக அவர் மதிக்கப்படுகிறார். வானொலி, தொலைக்காட்சி, கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயிற்சியும் ஊக்குவிப்பும் கொடுத்துவருகிறார்.

வாழ்க்கையின் இன்னல்களைத் தாண்டி சாதனை படைத்த ஜானியின் கதை பெரும் மக்கள் திரளை ஆற்றல்படுத்தி சாதனை படைக்கத் தூண்டுகிறது. இன்னல்களைத் தாண்டுதல், இளைஞர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ளுதல், மனத்தடைகளை உடைத்தல் மற்றும் தொழில்முனைவு முயற்சிகள் குறித்து அவர் தொடர்ந்து பேசிவருகிறார்.

இறந்தகாலமா நிகழ்காலம்?

ஜானியின் இளமைக் கால வாழ்க்கையின் முதல் ஞாபகமே கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் நிழலில் வாழ்ந்த சித்திரம்தான். அவர் அமெரிக்காவில் சிறு வயதிலேயே போதைப்பொருள் விற்பவராகக் கடுமையான பாதைகளைக் கடந்தவர். மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்த அனுபவங்களும் உண்டு. ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையின் போக்கை திசைதிருப்பத் தீர்மானிக்கிறார். தனது இறந்த காலம் தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர் முடிவுசெய்கிறார்.

20 வயதில், எந்த அனுபவமும் இல்லாமல், அவர் தற்காலிக உரிமம் ஒன்றை வாங்கிக் காப்பீட்டு முகவர் ஆகிறார். வேலையில் சேர்ந்த ஆறு மாதங்களில் நேஷனல் மார்க்கெட்டிங் ஏஜன்ஸியில் தேச அளவில் சிறந்த 50 முகவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனியர் ஏஜெண்ட்டிலிருந்து மாவட்ட நிர்வாகி ஆகி மண்டல நிர்வாகியாகவும் மாறுகிறார். ஒரு கட்டத்தில் மண்டலத் துணைத் தலைவராக டெக்சாஸ் மற்றும் ஒக்லஹாமாவின் நிர்வாகத்தை மேற்கொள்கிறார். பிற நிறுவனங்களுக்குப் பிராந்திய நிர்வாகிகளை வேலைக்கு எடுப்பதும், பயிற்சி கொடுப்பதும், விற்பனை மேம்பாட்டுத் திறன்களைக் கற்றுக்கொடுப்பதும் இவரது பணிகள். தனது சேவைகளுக்குப் பெரிய தேவை உள்ளதை உணர்ந்தார். அதன்பிறகு தனது திறன்களை இன்னும் மேலான காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவுசெய்கிறார் ஜானி விம்ப்ரே. பெரும்பணத்தைக் கொடுத்து அவரது உரையைக் கேட்க இன்று நிறுவனங்கள் உள்ளன.அவரது நூல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவருகின்றன.

அவற்றின் மூலம் நமக்குள்ளே உள்ள வெற்றியாளரைக் கண்டுபிடிக்கும் சவாலை ஜானி விம்ப்ரே விடுக்கிறார். அவரது செய்தி மிகவும் எளிமையானது. “உங்களது இறந்த காலம் உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது. என்னால் செய்ய முடியும் என்றால் யாராலும் செய்ய முடியும்”.

எளிமையான செய்திதான். ஆனால் வலிமையான செய்தி.அந்த செய்தியால் மனங்கள் செயல்படத் தொடங்குகின்றன. அந்த மனங்களின் வழியாக அவரது சாதனைப் பயணம் தொடர்கிறது.

SCROLL FOR NEXT