இணைப்பிதழ்கள்

ஒரு காலகட்டத்தின் சாட்சியம்

செய்திப்பிரிவு

ஆண்டனி ஷடீட் 1968-2012

செப்டம்பர் 26, ஆண்டனி ஷடீடின் 50-வது பிறந்த தினம்

தான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்பதைப் பதினைந்து வயதில் முடிவெடுத்து, எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவோடு தன் இதழியல் பணியைத் தொடங்கியவர்; மத்தியக் கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் சூழல்களால் மூளும் போர்களையும் அதன் விளைவாகச் சிதைவுக்குள்ளான மக்களின் வாழ்வையும் உலகுக்குத் தொடர்ச்சியாகத் தன் எழுத்துகளால் சொல்லி வந்தவர்.

ஈராக் போர், அரபுப் புரட்சி, சிரியா போர் என மத்திய கிழக்கின் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நேரடியாகக் களத்திலிருந்து செய்தியாக்கிய ஒப்பற்ற பத்திரிகையாளர் ஆண்டனி ஷடீட்.

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பிறந்து வளர்ந்த ஆண்டனி ஷடீட் லெபானனைப் பூர்வீகமாகக்கொண்டவர். முதலாம் உலகப் போரின்போது லெபானனின் மார்ஜயூன் கிராமத்தில் இருந்து ஷடீடின் முன்னோர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.

வரலாற்றுப் பின்புலத்தில் செய்தி

விஸ்கான்ஸின்-மேடிஸன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இதழியல் படித்து, பல்கலைக்கழக மாணவர் பத்திரிகையான ‘தி டெய்லி கார்டினல்’-ல் இதழியல் பயிற்சி பெற்றார். செய்தி நிறுவனமான ‘அசோசியேடட் பிரஸ்’-ன் மத்தியக் கிழக்கு செய்தியாளராக எகிப்தின் கெய்ரோ நகரில் இதழியல் வாழ்வைத் தொடங்கினார்.

‘பாஸ்டன் குளோப்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘நியூ யார்க் டைம்ஸ்’ ஆகிய நாளிதழ்களில் பணியாற்றினார். தன் கனவான மத்தியக் கிழக்கில் பணியாற்றுவதற்கு அரபி மொழி அறிந்திருப்பதன் அவசியத்தை உணர்ந்து அரபி கற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே மக்களிடம் நேரடியாக அவரால் உரையாட முடிந்தது. மக்களின் வாழ்வில் போர் உண்டாக்கிய பாதிப்பை அப்பட்டமாக வெளிக்கொண்டுவர இதுவே அவருக்கு உதவியது.

இதன் மூலம் நிகழும் சம்பவங்களோடு வரலாற்றையும் இணைத்து அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது அவருடைய எழுத்து. இதனால் மத்தியக் கிழக்கில் இருந்து எழுதிய மற்ற செய்தியாளரைவிடவும் அவர் எழுதிய செய்திகள் தனிக் கவனம் பெற்றன.

குண்டு துளைத்தும் தளராத மனம்

ஷடீட் ஒரு சாகச விரும்பி இல்லை. எனினும், அவருடைய இதழியல் வாழ்வு முழுக்க சாகசங்கள் நிரம்பியதாகத்தான் இருந்தது. ‘பாஸ்டன் குளோப்’ நிருபராக மார்ச் 2003-ல் இஸ்ரேலின் ரமல்லாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய ராணுவப் படையினரால் சுடப்பட்டார்.

இடது தோள்பட்டையில் பாய்ந்த குண்டு துளைத்து, மறுபக்கம் வெளிவந்தது. ‘அவர்கள் என் தலைக்குக் குறி வைத்திருக்க வேண்டும்; என்னுடைய குறிப்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததால், தவறிவிட்டது என்று நினைக்கிறேன்’ என்று இந்தத் தாக்குதல் குறித்து ஷடீட் கூறினார்.

குண்டடிபட்டிருந்தபோதும், பாலஸ்தீன மருத்துவருக்கும் இஸ்ரேலிய படைவீரர் ஒருவருக்கும் அன்றைய தினம் நிகழ்ந்த வாக்குவாதத்தைச் செய்தியாக்க தன்னுடைய ஆசிரியரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

இருமுறை புலிட்சர்

வாஷிங்டன் போஸ்ட் நிருபராக ஈராக் போரின் அவலங்களை உலகுக்கு எடுத்து சொன்ன ஷடீடுக்கு, 2004-ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்காக அரபுப் புரட்சி குறித்த நேரடி செய்திகளை வழங்கியதற்கு 2010-ல் இரண்டாவது முறையாக புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

16 மார்ச் 2011-ல் லிபியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஷடீட் உட்பட நான்கு செய்தியாளர்கள், அவர்களுடைய ஓட்டுநர் ஆகியோர் லிபிய அதிபராக இருந்த மம்மர் கடாஃபி படையினரால் கடத்தப்பட்டனர். ஓட்டுநர் கொல்லப்பட்டு, நால்வரும் அச்சுறுத்தலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

வாழ்நாளெல்லாம் களத்திலிருந்து செய்தி வழங்கிய ஷடீட், தலைசிறந்த போர் செய்தியாளராக சமகாலத்தவர்களால் மதிப்பிடப்பட்டார். லெபனானில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டைச் சீர்ப்படுத்தி தன் மனைவி குழந்தைகளுடன் அங்கு வாழ்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமான நிகழ்ந்த ஷடீடின் மரணம் அவரது குடும்பத்திற்கும், இதழியலுக்கும் பெரும் இழப்பு.

அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், மத்தியக் கிழக்கில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஆண்டனியின் இல்லாமை ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

- சு.அருண் பிரசாத்                           

SCROLL FOR NEXT