தமிழ்நாட்டில் 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் இருப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கான சங்கம் செப்டம்பர் 25 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் மீதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 28 பேர் மீதும் குற்றவழக்குகள் இருக்கின்றன என்று இந்த அறிக்கை தெரிவித்தது.
ஆதார் அட்டை செல்லும்
மத்திய அரசின் ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 26 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், வங்கிக் கணக்குகள், அலைபேசிகள், பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் ஆதார்-பான் கார்டு இணைப்பு, வருமான வரித் தாக்குதல் போன்றவற்றுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கியுள்ளது.
பூமியின் சாம்பியன்கள்
உலக அளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட ஆறு பேருக்கு ஐ.நா. ‘பூமியின் சாம்பியன்கள்’ விருதை செப்டம்பர் 26 அன்று அறிவித்தது. இதில் சர்வதேசச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பைச் சாத்தியப்படுத்தியதற்காக அரசியல் தலைமைப் பண்பு பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், நிலைத்தன்மைவாய்ந்த ஆற்றல் பயன்பாட்டுக்காக கொச்சின் சர்வதேச விமான நிலையத்துக்குத் தொலைநோக்குள்ள தொழில்முனைவோர் பிரிவில் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.
சபரிமலையில் பெண்கள்
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்கு வயது வரம்பின்றி அனைத்து பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு செப்டம்பர் 28 அன்று வழங்கியது. ஆண்கள், பெண்கள் என இருபாலினருக்குமே வழிபடுவதற்குச் சமமான உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள மாநில அரசு இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது.
இந்தியர்களின் மாத ஊதியம்
பொதுப்படையான பணிகளில் உள்ள 57 சதவீத இந்திய ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.10,000- க்கும் குறைவு என்ற தகவல் செப்டம்பர் 25 அன்று வெளியான அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களில் 1.6 சதவீதம் பேர்தான் ரூ. 50,000க்கும் அதிகமான மாத ஊதியம் பெறுகின்றனர் என்ற தகவலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக் குழு குறைந்தபட்சம் ரூ.18,000 மாத ஊதியமாக வழங்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது.
வாழ்வை எளிமையாக்கும் மாநிலங்கள்
மக்களின் வாழ்வை எளிமையாக்கும் மாநிலங்கள் பட்டியல் 2018-ல் சிறந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மத்திய குடியிருப்பு, நகர விவகாரத் துறை அமைச்சகம் செப்டம்பர் 24 அன்று தெரிவித்தது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஒடிஷாவும் மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசமும் இடம்பெற்றிருக்கின்றன.
உலகின் மிகப் பெரிய பறவை
உலகின் மிகப் பெரிய பறவை யானைப் பறவைதான் (Vorombe Titan) என்று பிரிட்டனைச் செய்த விஞ்ஞானிகள் செப்டம்பர் 26 அன்று தெரிவித்தனர். யானைப் பறவை பற்றி அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அது ஒரு வளர்ந்த ஒட்டகச்சிவிங்கியின் எடையைப் போல 860 கிலோ எடையுடன் இருந்ததாகக் கணித்திருக்கின்றனர். மடகாஸ்கரில் வாழ்ந்துவந்த இந்தப் பறவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டன.
இந்திய இளைஞர்களின் கவலை
இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பற்றிதான் அதிகமாகக் கவலைப்படுவதாக நியூயார்க்கில் இப்ஸோஸ் பப்ளிக் அஃபேர்ஸ் செப்டம்பர் 24 அன்று வெளியிட்ட ‘கோல்கீப்பர்ஸ் குளோபல் யூத்’ கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 40,000 பேர் கலந்துகொண்ட இந்தக் கருத்துக் கணிப்பில் இந்திய இளைஞர்கள் (12-24 வயதுவரை) 2,800 பேர் கலந்துகொண்டனர். இதில் 48 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை பற்றிதான் அதிகமாகக் கவலைப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
அழிந்துவரும் சதுப்புநிலங்கள்
உலகுக்கு நன்னீரை மறைமுகமாகவும் நேரடியாகவும் வழங்கிவரும் சதுப்புநிலங்கள் காடுகளைவிட மூன்று மடங்கு வேகமாக அழிந்துவருவதாக உலகளாவிய சதுப்புநில அமைப்பான ‘Global Wetland Outlook’ செப்டம்பர் 27 அன்று தெரிவித்தது. கடந்த 45 ஆண்டுகளில் (1970-2015), உலகின் 35 சதவீத சதுப்புநிலங்கள் அழிந்துவிட்டதாக இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 1.21 கோடி சதுர கிலோமீட்டர் அளவில் சதுப்பு நிலப் பகுதிகள் இருக்கின்றன.
10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள்
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள்தான் இருக்கின்றனர் என்ற தகவல், சட்ட அமைச்சகம் மார்ச், 2018-ல் தயாரித்த ஆவணத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த ஆவணத்தில், நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் 5748 நீதிபதிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் 24 உயர் நீதிமன்றங்களில் 406 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.