இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா: உலகின் முதல் இயற்கை மாநிலம்

கனி

உலகின் முதல் நூறு சதவீத இயற்கை மாநிலமாக அறிவிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்துக்கு 2018-ம் ஆண்டுக்கான ‘வருங்காலக் கொள்கை விருது’ (Future Policy Award) ஐ.நா.வால் அக்டோபர் 15 அன்று ரோம் நகரில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். 25 நாடுகளைச் சேர்ந்த 51 மாநிலங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. உலகில் சிறந்த சட்டங்கள் வகுத்து வேளாண் சூழலியலைப் பின்பற்றும் மாநிலத்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் புதிய வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்சேர்க்க 11.91 லட்சம் பேர் விண்ணப்பத்திருப்பதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அக்டோபர் 16 அன்று தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயரைச் சேர்க்கவோ நீக்கவோ செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 1 அன்று தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மூன்று சதவீதமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 16 அன்று அறிவித்திருக்கிறார். கடந்த சுதந்திர தின விழாவின்போது, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இரண்டு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அது மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மறைவு

உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வரும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவருமான நாராயண் தத் (என்.டி.) திவாரி டெல்லியில் அக்டோபர் 18 அன்று மறைந்தார். அவருக்கு வயது 93. இவர் மூன்று முறை உத்தரபிரதேசத்தின் முதல்வராகவும் உத்தராகண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார். இவர் 2007-2009 வரை, ஆந்திரபிரதேச ஆளுநராகவும் இருந்திருக்கிறார்.

பாரா ஆசிய விளையாட்டு 72 பதக்கங்கள் வென்ற இந்தியா

இந்தோனேசித் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 13 அன்று நிறைவடைந்தன. இந்தப் போட்டிகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இந்த 2018 பாரா ஆசிய விளையாட்டில் 319 பதக்கங்களை வென்ற சீனா முதலிடத்தையும், 144 பதக்கங்களை வென்ற கொரியக் குடியரசு இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மேன் புக்கர் பரிசு அறிவிப்பு

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் எழுதிய ‘மில்க்மேன்’ நாவலுக்கு 2018-ம் ஆண்டுக்கான ‘மேன் புக்கர்’ பரிசு லண்டனில் அக்டோபர் 16 அன்று அறிவிக்கப்பட்டது. வட அயர்லாந்து பகுதியிலிருந்து இந்தப் பரிசைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். மேன் புக்கர் பரிசு வழங்க தொடங்கிய 49 ஆண்டுகளில், இந்தப் பரிசைப் பெறும் பதினேழாவது பெண் இவர்.

பெல்ஜியத்தில் ஆசிய-ஐரோப்பிய மாநாடு

பன்னிரண்டாவது ஆசிய-ஐரோப்பிய மாநாடு (ASEM) பெல்ஜியம் நாட்டின் தலைநகரமான பிரெஸ்ஸெல்ஸ் நகரில் அக்டோபர் 18 அன்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் 30 ஐரோப்பிய நாடுகளும், 21 ஆசிய நாடுகளும் கலந்துகொண்டன. வர்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டார்.

SCROLL FOR NEXT