தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், பிசியோதெரபிஸ்ட், உதவி மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றோர் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது பொது மருத்துவப் பணியில் 1884 உதவி மருத்துவர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்தப் பணிக்கு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு காலம் உறைவிட மருத்துவராகப் பணியாற்றி இருக்க வேண்டும். அதோடு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டியதும் அவசியம்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 35 ஆகவும் பி.சி., பி.சி. (முஸ்லிம்), டி.என்.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 57 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்காணல் எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் ‘அப்ஜெக்டிவ்’ முறையில் 200 வினாக்கள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 100. இரண்டரை மணி நேரத்துக்குள் விடையளிக்க வேண்டும். சென்னையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். காலியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
தகுதியுடைய எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (www.mrb.tn.gov.in) பயன்படுத்தி அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரம், சம்பளம், தேர்வுக்குரிய பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.