வருங்காலத் தலைமுறையை செதுக்கி உருவாக்கும் அற்புதமான பணியைச் செய்பவை கல்லூரிகள். சிறந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதல்தான் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறது. நாட்டின் உன்னதமான எதிர்காலம் நம் கல்லூரிகளில்தாம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு நல்ல கல்லூரியின் அடையாளம் அது உருவாக்கித் தரும் மாணவர்கள்தான். அத்தகைய கல்லூரிகளின் அரிய சேவையைப் பெருமைப்படுத்த... அதன் மாணவர்களை வெளிச்சமிட்டு உலகத்துக்குக் காட்டுவதுதானே சரியான வழியாக இருக்க முடியும்!
இதோ அதற்குத்தான் உங்கள் ‘வெற்றிக்கொடி’ புதிய கதவைத் திறக்கிறது. 'நம் கல்லூரியின் நட்சத்திர மாணவர்’ என்ற புதிய பகுதியை ஆரம்பிக்கிறது. இதில் சிறந்த கல்லூரிகளையும் சிறந்த மாணவர்களையும் உலகறியச் செய்யப் போகிறோம்...
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
1. உங்கள் கல்லூரியின் சிறந்த மாணவர்களைக் கீழே உள்ள நான்கு பிரிவுகளின் கீழ் அடையாளப்படுத்துங்கள். இளம் ஜீனியஸ் – உங்கள் கல்லூரியின் படைப்பாற்றல் ஆய்வுக்கூடத்தில் (Centre for Innovation) அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்த மாணவர்/மாணவி/மாணவக் குழு (இருக்கும்பட்சத்தில்), மாணவர் பத்திரிகை (இணையம்/அச்சு) நடத்தும் குழுவினர், வாசகர் வட்டம் நடத்தும் குழுவினர்.
நாளைய தலைவர் – குழுவை வழிநடத்தும் தலைமைப் பண்பு, பொது அறிவில் ஆர்வம், சிறந்த பேச்சாற்றல், சேவை மனப்பான்மை, சமூக அக்கறை மிக்க மாணவர்/மாணவி.
இளைய கலைஞர் – இசைத் திறன், நடனத் திறன், ஒளிப்படக் கலைத் திறன், குறும்படம் இயக்குதல், சிறுகதை எழுதுதல், கவிதை வடித்தல், பேச்சுத் திறன், கட்டுரை எழுதுதல், நடிப்புத் திறன், சமையல் திறன் உள்ளிட்ட கலை சார்ந்த திறன்களில் ஜொலிக்கும் மாணவர்/மாணவி/ மாணவக் குழு (இருக்கும்பட்சத்தில்) நட்சத்திர வீரர் – விளையாட்டுகளில் வெற்றிகளைக் குவிக்கும் மாணவ/மாணவி/மாணவக் குழு (இருக்கும்பட்சத்தில்)
2. ‘இளம் ஜீனியஸ்’, ‘நாளைய தலைவர்’, ‘இளைய கலைஞர்’, ‘ நட்சத்திர வீரர்’ ஆகிய 4 விருதுகளுக்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவியரின் பெயர், பாடப் பிரிவு, ஆண்டு போன்றவற்றைக் குறிப்பிட்டு, படங்களையும் இணையுங்கள். ஒவ்வொரு விருதாளர் குறித்து 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுங்கள்.
3. இவற்றுடன் முதல்வர், தாளாளரின் படங்களையும் இணைத்து, கல்லூரியின் முகவரி, தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி சர்குலேஷன் மேனேஜர், வெற்றிக்கொடி, இந்து தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை – 600 002. காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் அதற்கு முன் 9566180709 எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். ஆசிரியர் தீர்ப்பு இறுதியானது. |