இணைப்பிதழ்கள்

உயர்கல்வி வழிகாட்டி: கல்லூரிக்குள் கால்பதிக்கத் தயாரா?

செய்திப்பிரிவு

பள்ளியில் பல ஆண்டுகளைக் கழித்துவிட்டீர்கள். அடுத்து, கல்லூரிக்குச் செல்ல உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. பன்னிரண்டு ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிக்கூடச் சூழலில் வளர்ந்தவர்களுக்கு நெருக்கடி இல்லாமல் சுதந்திரமாகக் கற்பதற்கான இடமாகவே கல்லூரி தோன்றும். அதே நேரம், அந்தப் புதிய சூழலை எப்படி அணுகுவது, மாற்றங்களுக்கு எவ்வாறு தகவமைத்துக்கொள்வது என்ற திகைப்பு ஏற்படும்.

திறந்த மனநிலை தேவை

இந்நேரம் உங்களுடைய பெற்றோர்களும் நலம் விரும்பிகளும் சக வயது நண்பர்களும் ஏராளமான தகவல்களைப் பகிர்ந்திருப்பார்கள். தங்களுடைய அனுபவத்தில் இருந்து ஆலோசனைகளை அள்ளித் தெளித்திருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல; கல்லூரியில் புது முகங்களாகச் சேர்பவர்களை இயல்பாக உணரச்செய்யத் தற்போது கல்லூரிகளும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றன.

புதிதாகத் தோன்றும் கல்லூரி வாழ்க்கையின் இயல்பை மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவும் தகவல் மையங்களையும் வழிகாட்டிக் குழுக்களையும் கல்லூரிகள் ஏற்படுத்திவருகின்றன. அதனால், கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு முதலாவதாகத் தேவைப்படுவது முன் தீர்மானம் இல்லாமல் சரியான நபரை அணுகி, ஐயங்களுக்கு விளக்கங்கள் பெறவும் புதிய விஷயங்களை வேகமாகக் கற்றுக்கொள்வதற்கான திறந்த மனநிலையே.

சமூகத்தில் இணைய

சமூகத்தில் எல்லோருடன் சகஜமாக இணைந்து பழகும் திறன்களைவிட இணையத்தில் எல்லாவற்றுக்கும் விடை தேடும் திறன்படைத்த இளைஞர்களைத்தாம் இன்றைய டிஜிட்டல் யுகம் உருவாக்கி இருக்கிறது. நேர் எதிரே அமர்ந்திருக்கும் நபரிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, கூகுளில் தீர்வுகளைத் தேடி அறிவதையே நாம் விரும்புகிறோம்; அதுவே பழகிப்போய்விட்டது.

ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கச் சிரமமாக இருக்கும்போது, பிறருடன் அது குறித்து விவாதிப்பது ஏகப்பட்ட சாத்தியங்களை உங்களுக்குத் திறந்துவிடும். நட்பை வளர்த்துக்கொள்ளவும், குழுவாகப் பணியாற்றும் திறனை மெருகேற்றவும் பிறரின் சிந்தனையை மதிக்கப் பழகவும் உங்களது தனித் திறன்களை வெளிப்படுத்தவும் உங்களைத் தயார்படுத்தும் இடமாகக் கல்லூரி வளாகம் இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் பேராசிரியர்களைச் சந்திக்கத் தயங்கித் தவிர்ப்பதும், ஐயங்களுக்கு அவர்களிடமிருந்து விளக்கம் பெறாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதும் மாணவர்கள் பொதுவாகச் செய்கிற ஒரு தவறு. ஆர்வத்துடன் தங்களை அணுகுகிற மாணவர்களுக்குத் தங்களது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொள்வதில் பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களை அறிவின் அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்ல ஆசைப்படாத ஆசான் இருக்க முடியுமா! இளம் திறமைசாலிகளை ஊக்குவித்து வளர்ப்பதற்குக் கல்வி நிறுவனங்களில் சிறப்புக் கவனம் வழங்கப்படுகிறது.

பட்டை தீட்டத் தூண்டுகிறது!

தங்களுடைய இலக்கைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்ள மாணவர்களை உந்தித் தள்ளி அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றுகிறது கல்லூரி வாழ்க்கை. இலக்கைத் தீர்மானிக்கும்போது அது வெறும் பகல் கனவாகக் கலைந்துபோகவிடாமல், ஒவ்வொரு மைல்கற்களை நிர்ணயிக்கும்படிச் சுட்டிக்காட்டுகிறது. உதாரணத்துக்கு, ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கவும் நேர மேலாண்மையின் மதிப்பைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தன்னைத்தானே பட்டை தீட்டிக் கூர்மையாக்கவும் கல்லூரி வாழ்க்கைத் தூண்டுகிறது.

பட்டை தீட்டப்படாத வைரமாக இருக்கும் திறனுள்ள மாணவர்களை, அவர்கள் விரும்பி தேர்வுசெய்திருக்கும் துறையில் வல்லுநர்களாகக் கல்லூரி வளர்த்துவிடுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் சமநிலையில் அணுகும் பண்பாளர்களாக அவர்களை உருவாக்குகிறது. உங்களது திறன்களைப் பரிசோதிக்கிற தளமாகவும் கல்லூரி இருக்கிறது.

ஒரு புதுமுக மாணவராக நீங்கள் கல்லூரிக்குள் நுழையும்போது, வாய்ப்புகள் அடங்கிய சுரங்கத்தின் கதவுகளை நீங்கள் திறக்கிறீர்கள். நம்பிக்கையோடும் விவேகத்தோடும் செயல்பட்டு வெற்றிக்கான பாதையை நீங்கள் கண்டறியலாம். பேரார்வமும் விடாமுயற்சியும் உழைப்பும் இருக்குமானால் வெற்றி நிச்சயம்.

கட்டுரையாளர்: ஜே. சுதாகர், பேராசிரியர், மிடாஸ் (MIDAS) கல்லூரி, காஞ்சிபுரம்
தொடர்புக்கு: sudhakar.j@midas.ac.in

SCROLL FOR NEXT