வேலை தேடி அலையும்போது பலவிதமான நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்க வேண்டிவரும். அவற்றில் முந்தைய நிறுவனங்களில் நீங்கள் எப்படி வேலை செய்தீர்கள் எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைத் துருவிப் பார்த்துப் புரிந்துகொள்ள முயல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நேர்முகத் தேர்வு. தேர்வாளர்களுக்கு முன் அமர்ந்திருக்கிறான் உங்கள் நண்பன் ஆதர்ஷ்.
தேர்வாளர் 1 : மிஸ்டர் ஆதர்ஷ்! நீங்க ஏற்கனவே ஒரு வேலையிலே இருக்கீங்க இல்லையா? அந்த நிறுவனத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஆதர்ஷ் – உயர்வானதுதான் சார். விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவார்கள். எனக்கும் சரியான அங்கீகாரம் கொடுத்தார்கள்.
தேர்வாளர் 2 – எதற்காக உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்?
ஆதர்ஷ் - நான் நேரம் தவறாமையை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிப்பேன் சார். டைரி எழுதும் பழக்கம் இல்லை. என்றாலும் ப்ளான்னரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவேன்.
தேர்வாளர் 2 – இதற்காக எந்தவித அங்கீகாரம் கிடைத்தது?
ஆதர்ஷ் – ஒரு மீட்டிங்கில் பலருக்கு முன்னால் எங்கள் நிர்வாக இயக்குநர் என்னைப் பாராட்டினார்.
தேர்வாளர் 1 – ஐ ஸீ.
ஆதர்ஷ் – நான் வேலை பார்க்கும் கம்பெனியின் இமேஜை என்னால் முடிந்தவரை பாதுகாத்திருக்கிறேன். (இப்படிக் கூறும்போதே அவன் முகத்தில் பெருமிதம் தெளிவாகப் புலப்படுகிறது)
தேர்வாளர் 3 - உங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கும் திருப்தி. உங்களைப் பற்றி உங்கள் நிறுவனத்துக்கும் திருப்தி. அப்புறம் எதற்காக எங்கள் நிறுவனத்தில் சேருகிறீர்கள்?
ஆதர்ஷ் - இப்போது இருக்கும் நிறுவனத்தைவிட உங்களிடம் சேர்ந்தால் முன்னுக்கு வரும் வாய்ப்பு மிக அதிகம். பலவித புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. தவிர நீங்கள் கொடுக்கும் ஊதியமும் அதிகம்.
தேர்வாளர் 2 – இதற்காக உங்கள் நிறுவனத்தை விட்டுவிட்டு வருவது ஒருவிதத்தில் நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?
ஆதர்ஷ் – மன்னிக்கவும். எந்த நிறுவனமும் ஒரு தனி நபரை நம்பி இல்லை, இருக்கக் கூடாது. தவிர நான் கற்றுக் கொண்டதையெல்லாம் எனக்கு அடுத்து வருபவரிடம் கற்றுக் கொடுத்து விட்டுத்தான் நான் உங்களிடம் வேலைக்குச் சேருவேன்- அதாவது அந்த வாய்ப்பை எனக்கு நீங்கள் அளித்தால்.
தேர்வாளர் 2 – ஓகே. உங்கள் நிறுவனத்தில் இமேஜை உயர்த்தியதாகச் சொல்கிறீர்களே, எந்தவிதத்தில்?
ஆதர்ஷ் – வாடிக்கையாளர்களின் ‘கால்’களை’ நான் நிறையக் கையாண்டிருக்கிறேன். அவர்களுக்குத் திருப்திகரமாகப் பதிலளிப்பேன். எங்கள் தரப்பில் குறையிருந்தால் அதை ஒப்புக் கொண்டு, சரி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வேன். இதனாலெல்லாம் எனக்கு நிறுவனத்திலும், வாடிக்கையாளர்களிடமும் நல்ல பெயர்.
தேர்வாளர் 2 – கேட்க சந்தோஷமாக இருக்கிறது. உங்களைப் பற்றி மிகவும் நல்ல கருத்து கொண்டிருக்கும் இரண்டு வாடிக்கையாளர் – நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
(ஆதர்ஷ் உடனடியாக நான்கு நிறுவனங்களின் பெர்களை விரிவாகவே கூறுகிறான். நேர்முகத் தேர்வு தொடர்கிறது)
ஆதர்ஷூக்கு வேலை கிடைக்குமா?
பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவதுதான் நல்லது. மட்டமாகப் பேசினால், “இவனுக்கு வேலை அளித்தால், நாளை நம் நிறுவனத்தைப் பற்றியும் இவன் மட்டமாகத்தான் பேசுவான்’’ என்று தேர்வாளர்கள் நினைத்துவிட வாய்ப்பு உண்டு. எதைக் கூறினாலும் அதற்கு ஆதாரம் கொடுத்தால்தான் உரிய மதிப்பு கிடைக்கும்.
“நான் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவன்’’ என்று சொன்னால் தேர்வாளர்கள் அப்படியொன்றும் மகிழ்ந்துவிட மாட்டார்கள். மாறாகக் “கடந்த மூன்று வருடங்களில் நான்கே நாட்கள்தான் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாமதமாக ஒரு நாள்கூடப் போனதில்லை’’ என்று குறிப்பாகக் கூறினால், அதற்கான மதிப்பே தனிதான். “இதற்காக என்னைப் பாராட்டி நிர்வாகம் ஒரு ட்ரீட் கொடுத்தது’’ என்று சொன்னால் அதற்கு மேலும் மதிப்பு. அந்த விதத்தில் நிர்வாகம் தன்னைப் பாராட்டியதாக ஆதர்ஷ் கூறியதற்குத் தேர்வாளர்களிடையே அங்கீகாரம் கிடைக்கும்.
தவிர ஆதர்ஷ் நேர்மையாகப் பேசுகிறான். இருக்கும் வேலையை விட்டுவிடுவதற்காக அவன் கூறும் காணங்கள் ஏற்கத்தக்கவையாகவே உள்ளன. இதேபோல் இன்னொரு உதாரணமும் குறிப்பிடலாம். வாடிக்கையாளர் சேவை செய்வதாகக் கூறினால், தேர்வாளர்களைப் பொருத்தவரை அதை நம்பவேண்டுமென்பது கட்டாயம் இல்லை. ஆனால் ஆதர்ஷ் உடனடியாகத் தன்னைப் பற்றிய நன்மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பெயர்களைக் கூறும்போது ஒரு நம்பகத் தன்மை கிடைத்து விடுகிறது. நேர்முகத் தேர்வில் ஆதர்ஷ் தேர்ச்சி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
இதோடு ‘சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது’ என்றோ ‘சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக எனக்கு விருது அளித்தார்கள்’ என்றோ ஆதர்ஷ் கூறியிருந்தால், (அப்படி நிஜமாகவே நடந்திருக்க வேண்டும்) தேர்வாளர்களைப் பொறுத்தவரை அது இன்னும் ஒருபடி மேல்தான்.
நண்பனின் நேர்முகத் தேர்வை பார்த்தது உங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது இல்லையா?
தொடர்புக்கு: aruncharanya@gmail.com