சீனாவுடன் இந்தியா போட்டிபோட முடியவே முடியாதா, சீனாவில் சென்று தொழில் தொடங்க வழி உள்ளதா?
- ரவி சங்கர், அம்பத்தூர்.
சீனா தொழில் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் வளர்ந்த வேகத்தையும் கணக்கிட்டால், போட்டியிடுவது கடினம்தான் என்பதை உணர முடியும். சீனர்களுக்கு அவர்களின் பலம், பலவீனம் இரண்டும் தெரிகிறது. அதற்கேற்ப அவர்களுடைய எல்லாத் திட்டங்களும் உள்ளன. நமக்கு நம்மைத் தெரியுமா என்பது பெருத்த சந்தேகமே. உழைப்பு, வேலைத் திறன், தொழிலுக்குச் சாதகமான சூழல் என எல்லாவற்றிலும் நாம் முன்னேற வேண்டியுள்ளது. சீனாவின் அலிபாபா பன்னாட்டு நிறுவனத்தின் அசாத்தியமான வளர்ச்சி உலகத்தை சீனா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சீனாவிலும் ஹாங் காங்கிலும் நிறையத் தமிழர்கள் தொழில் செய்கிறார்கள். அங்கு ஆங்கிலத்துக்கு, யோகாவுக்கு, மென்பொருளுக்கு எனப் பெரிய சந்தை நமக்கு உள்ளது. அவர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகச் சூழல், தொழில்நுட்ப வசதி என அனைத்தையும் அலசிவிட்டுத் முடிவு செய்வது நல்லது. என்னைக் கேட்டால், மாண்டரின் படித்துவிட்டு, சீனாவுக்குச் சென்று கள ஆய்வு செய்வதிலிருந்து உங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்கலாம்.
நான் செய்ய நினைக்கும் புதிய தொழிலுக்குச் சந்தையில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் முதலீடு அதிகம் செய்யவிருப்பதால் கண்டிப்பாக மார்க்கெட்டிங் ரிசெர்ச் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது.
ஆனால், மார்க்கெட்டிங் ரிசெர்ச்சுக்காகச் சிறிய நிறுவனங்களை அணுகினால் அதிகக் கட்டணம் கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?
- ஹரி, திருநெல்வேலி.
யோகா செய்ய ஆயிரம் ரூபாய் கேட்டால் யோசிப்போம். ஆனால், மாரடைப்பு வந்தால் பத்து லட்சம் செலவு செய்யத் தயாராவோம். ஒரு பொருளுக்குச் செலவு செய்யத் தயங்க மாட்டோம். ஆனால், ஒரு கருத்துக்குச் செலவு செய்ய மனம் கணக்குப் போடும். அதனால்தான் ஆலோசனைகளைப் பெரும்பாலும் நாம் பணம் கொடுத்துப் பெற யோசிக்கிறோம்.
நம்முடைய வாழ்வைப் பெரிதும் பாதிக்கும் முடிவுகளுக்கு கணக்குப் பார்த்து சமரசம் செய்யலாமா? வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்கள் அணுகும் நிறுவனத்தின் கட்டணத்தைக் குறைப்பதைவிட, அவர்களிடம் அதிக சேவையைக் கோருங்கள். அதிகத் தகவல்கள் பெறுங்கள். ஆய்வுக்குப் பின்னும் சில பணிகள் செய்ய முடியுமா என்று கேளுங்கள். உங்கள் வளர்ச்சியில் அவர்களைப் பங்குதாரர்கள் ஆக்குங்கள். ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். சந்தை ஆய்வு என்பது நல்ல முடிவு. அவசியம் செய்யுங்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
‘தொழில் தொடங்கலாம் வாங்க!’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in |