இணைப்பிதழ்கள்

மாணவர் மனம் நலமா? 11: சிரிப்பு வருது...நினைவாற்றல் வளருது...

டாக்டர் டி.வி.அசோகன்

கல்லூரியில் உயிரி வேதியியல் படித்துவருகிறேன். என்னால் சில பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி?

- டேவிட்சன் ஆசிர்வாதம், நாகர்கோவில்.

கடந்த வாரம் நீங்கள் சென்றுவந்த திருமண நிகழ்ச்சியை நினைத்துப் பாருங்கள். உடனடியாக மணமகன், மணமகளை நினைவுகூரமுடியும். சாப்பிட்ட இடத்தில், உங்களுக்கு உணவு பரிமாறியவரை கொஞ்சம் சிரமப்பட்டு நினைவுகூரமுடியும். கைகழுவும் இடத்தில் உங்களுக்கு முன்பு கை கழுவியது யார் என்று சொல்லச் சற்றுச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதே நிகழ்வை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நினைவுகூருவது மிகவும் சிரமமாக இருக்கும்.

நினைவுகொள்ளுதல் வயதானவர்களுக்கு இன்னும் சிரமமானதாக மாறலாம். ஏனென்றால், வயதாகும்போது போதுமான கவனம், ஒருமுகப்படுத்தும் தன்மை, புலனுணர்வு போன்றவற்றில் பிரச்சினை ஏற்படக்கூடும். மூப்பின் காரணமாக டெமென்ஷியா என்ற மறதிநோய் ஏற்பட்டு நினைவு பாதிக்கப்படலாம்.

1. ஆர்வத்துடன் பார்க்கப்படும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளை வரிசை மாறாமல் ஒரு மாதம் கழித்துக்கூட நினைவுபடுத்திச் சொல்ல முடிகிறது. இதே ஆர்வத்துடன் கற்பதுதான் நினைவாற்றலுக்கு அடிப்படை.

2. காட்சிகளை உருவகப்படுத்தி அவற்றை ஒரு சங்கிலித்தொடராக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில், ஐந்து நபர்கள் உங்களுக்கு அறிமுகமானால் அவர்களை நன்கு அறிந்த பொருட்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள். பாலகிருஷ்ணன் என்பவருக்கு, ‘பால்’ என்ற சொல், சந்திரன் என்பவருக்கு, ‘நிலா’, மாத்யூ என்பவருக்கு, ‘மழை’ என்று வைத்துக்கொள்ளலாம். பின் அந்த மாற்றுப் பெயர்களை ஒன்றாகச் சேர்த்து, முடிந்தால் ஒரு அர்த்தமுள்ள சொற்றொடராக மாற்றிக்கொள்ளுங்கள்.

3. மனதுக்குள் ஒரு மரம் வளர்க்கலாம்: ஒரு பெரிய கட்டுரையை நினைவில் நிறுத்த இந்த முறை உதவும். கட்டுரையின் தலைப்பை மரமாகவும், பகுதிகளைப் பெரிய கிளைகளாகவும், பிரிவுகளைச் சிறுகிளைகளாகவும், நுண்ணிய விஷயங்களை இலைகளாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

4. பாலத்தைக் கட்டுங்கள் : அறிதிறன் உளவியலில் (Cognitive Psychology) சங்கிங் (chunking) என்பது பல சிறிய விஷயங்களைக் கோத்து பெரிய பிரிவாக உருவாக்குவதைக் குறிக்கும் சொல். உதாரணமாக, ஒரு கைபேசியின் எண் 9-8-7-9-6-9-1-5-7-9 என்று வைத்துக்கொள்வோம். இந்த எண்களைத் தனித்தனியாக நினைவுபடுத்திக்கொள்வதைவிட, 987-969-1579 என்று நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. குறுகியகால நினைவுத்திறனுக்கு இந்த முறை மிகவும் பலனளிக்கும்.

5. பத்திகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்: வெகுகாலத்துக்கு நினைவுகொள்ள, ஒரு பக்கம் உள்ள கட்டுரையை மூன்று பத்திகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

6. கிளிப்பிள்ளைபோல வாசியுங்கள்: சொற்பொருள் விளக்க உரை, சூத்திரங்கள் ஆகியன தேர்வில் அப்படியே எழுதப்பட வேண்டியவை. இந்த வகை விஷயங்களை, திரும்ப திரும்பப் படிக்க வேண்டும். சில நேரம் எழுதிப்பார்க்க வேண்டும். மதிய வேளைகளில் இவற்றை வாசிப்பது நல்லது.

7. நகைச்சுவையாக மாற்றுதல்: மூளையில் இருக்கும் 12 வகை நரம்புகளை நினைவுகொள்ள வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அந்த நரம்புகளின் முதல் எழுத்துகள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு சொற்றொடர்களை உருவாக்கிக்கொள்ளலாம். உருவாக்கும் சொற்றொடர் வித்தியாசமாக அல்லது நகைச்சுவை வரவழைப்பதுபோல இருந்தால் நினைவுகொள்ள மிகவும் எளிதாக இருக்கும்.

8. தொடர்புபடுத்தும் முறை: மிகக் கடினமான செய்திகளை நினைவுபடுத்த நமக்குப் பரிச்சயமான பொருள் அல்லது நிகழ்வோடு தொடர்புபடுத்துவது சிறந்தது.

9. முயற்சியும் பயிற்சியும்: முதலில் குறுகிய கால நினைவாற்றலுக்கு முயற்சி முக்கியம். பின் அந்த நினைவுகளை நீண்ட காலம் தேக்கிவைத்திருப்பதற்கு அவ்வப்போது பயிற்சி அவசியம். நீண்ட கால நினைவாற்றலுக்கு வாரம் ஒருமுறை, அடுத்து மாதம் ஒருமுறை பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

10. படிக்கும்போது மனதை ஒருமுகப்படுத்துங்கள்: மனம் தெளிவில்லாத நிலையில், குழப்பமான சூழ்நிலையில் கற்கும் அனைத்து விஷயங்களும் ‘நீரின் மேலெழுத்தாக’ மாறிக் கரைந்துவிடும். ஒரு உற்சாகமான சூழ்நிலையில் கற்கும் அனைத்துச் செய்திகளும், ‘கல்லின் மேலெழுத்தாக’ மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

11. கவனச் சிதறலைத் தவிர்த்திடுங்கள்: பல மாணவர்கள் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு படிப்பது நல்ல பலனளிக்கிறது என்கிறார்கள். ஏற்கெனவே படித்த விஷயங்களின் திருப்புதலுக்கு இது கைகொடுக்கலாமே தவிர புதிய விஷயங்களை இம்முறையில் நினைவுகொள்வது மிகவும் சிரமம்.

12. படிக்கும் நேரம்: புதிய செய்திகளை, கடினமான பகுதிகளை விடியற்காலையில் முதன்முதலாகப் படியுங்கள்.

13. தூக்கம் அவசியம்: நினைவுகளைத் தேக்கிவைத்திருப்பதற்கு, தூக்கம் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலே உள்ளப் படத்தை ஒரு நிமிடம் உற்றுப்பாருங்கள். பின் ஒரு வெள்ளைத் தாளில் நினைவுபடுத்தி எழுதுங்கள்.

25-க்கு மேலிருந்தால் நீங்களே உங்கள் நினைவாற்றலுக்குக் கைதட்டுங்கள்!

‘மாணவர் மனம் நலமா?’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன்(தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

SCROLL FOR NEXT