இணைப்பிதழ்கள்

வேலைவாய்ப்பு: பட்டயப் படிப்புடன் வங்கி வேலை

ஜெ.கு.லிஸ்பன் குமார்

அரசு வங்கிகளும், தனியார்துறை வங்கிகளும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் போட்டிபோட்டு நியமித்து வருகின்றன. இத்தகைய நியமனங்கள் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ, வங்கி மற்றும் நிதிச்சேவை குறித்த முதுகலைப் பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) வழங்கி, படித்து முடித்தவுடன் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் அமர்த்தவும் முன்வந்துள்ளது.

பெங்களூர் மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஓராண்டு காலப் பட்டயப் படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்புக்கு 500 பேர் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தகுதி

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தகுதியுடைவர்களே. வயது 20 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை உண்டு.

தேர்வு

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு (வங்கிச் சேவை தொடர்பான கேள்விக்கு முக்கியத்துவம்) ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் >http://ibpsregistration.nic.in/ibps_idbipg/ என்றஇணையதளத்தில் ஜூலை 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.600-ஐ (எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் எனில் ரூ.100) ஆன்லைனில் செலுத்திவிடலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த விண்ணப்பத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தேர்வுசெய்யப்படும் நபர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.3.5 லட்சம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்த ஐடிபிஐயே கல்விக்கடன் வழங்கும். படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் கடனை மாதாமாதம் செலுத்திக்கொள்ளலாம். பயிற்சிக் காலத்தில் முதல் 9 மாதங்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகையும், 3 மாத கால இன்டர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளராக (கிரேடு-ஏ) பணியில் அமர்த்தப்படுவர்கள். அப்போது சம்பளம் ரூ.41 ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவ-மாணவிகளுக்கு ஐடிபிஐ வங்கியானது, ஒரு வார காலத்திற்குத் தீவிரப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த விரைவுப் பயிற்சி ஆகஸ்ட் மாதம் 16 முதல் 21-ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு: >http://www.idbi.com/pdf/careers/Advertisementdetailed-IDBI-Manipal-School-of-Banking.pdf

SCROLL FOR NEXT