யூஜிசி என சுருக்கமாக அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு பல உதவித்தொகை திட்டங்களை வழங்குகிறது. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களின் ஒற்றைப் பெண்கள் உயர்கல்வி பயிலுவதற்காகத் தனியான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை முதுகலை பட்டப் படிப்பு கல்வி உதவித்தொகை
பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக யூஜிசி இந்த உதவித்தொகையை வழங்குகிறது. வீட்டில் ஒரே பெண் குழந்தையாக (Single Girl Child) இருக்க வேண்டும். கலை-அறிவியல் பாடங்களில் முதுகலைப் படிப்பு (எம்ஏ, எம்எஸ்சி, எம்காம்.) படிக்க மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை பெறலாம். ஓராண்டில் 10 மாதங்களுக்கு மட்டும் இது கிடைக்கும். வயது 30-க்குள் இருக்க வேண்டியது அவசியம். ஒரே பெண் குழந்தை என்பதற்கு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் வாங்கி உறுதிமொழிப் பத்திரத்தை, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது ஆன்லைனிலேயே சமர்ப்பித்து விடலாம். இந்த ஆண்டு உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள மாணவிகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் யூஜிசி இணைய தளத்தில் (www.ugc.ac.in) ஆன்லை னில் விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழக ரேங்க் மாணவர் முதுகலை கல்வி உதவித்தொகைத் திட்டம்
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை உயர்கல்வி பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த உதவித்தொகைத் திட்டம். கொண்டுவரப்பட்டது பல்கலைக்கழக அளவில் கலை அறிவியல் படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம்) முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள். அவர்கள் முதுகலைப் பட்டப் படிப்பதற்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 15-ந் தேதி.