இணைப்பிதழ்கள்

ஒரு விண்வெளி சகாப்தம்

சி.ராமலிங்கம்

லைக்கா தினம்: நவம்பர் 4

உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகைகளில் 60 வருடங்களுக்கு முன்னால் நிரம்பி வழிந்த பெயர், லைக்கா. பலர் வரவேற்றனர். பலர் எதிர்த்தனர். அப்படி என்ன இந்தப் பெயரில் இருக்கிறது?

அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம். எவ்வளவு அணு ஆயுதங்கள் சோவியத் யூனியனிடம் இருக்கிறது, எவ்வளவு அமெரிக்காவில் இருக்கிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்த நேரம். இந்தக் காலகட்டத்தில்தான் ரஷ்யாவின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு பெண் நாய் விஞ்ஞானிகளின் கண்களில் பட்டது. இந்த நாய் தங்களுடைய விண்வெளித் திட்டத்துக்கு உகந்ததாக இருக்கும் என்று நினைத்து கூட்டிவந்தார்கள். அதற்கு லைக்கா என்ற அழகான பெயரைக் கொடுத்தார்கள். லைக்காவுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

லைக்கா விண்வெளி ஓடத்தில் பறந்து செல்லத் தயாராக இருந்தது. உலகத்தில் விண்வெளியில் பறக்கும் முதல் விலங்கு என்ற பெயர் லைக்காவுக்குக் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்துவது என்பதே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. இதற்காக பல வருடங்கள் திட்டமிட வேண்டியிருந்தது. இதன் பலனாக ஸ்புட்னிக் -1 விண்வெளியில் நிறுத்தப்பட்டது. அடுத்து ஒரு மாதம் ஒரு நாள் கழித்து ஸ்புட்னிக்-2 நவம்பர் 4, 1957-ல் செலுத்த தயாரானது.

விண்வெளிக்குச் செல்ல லைக்காவுக்குப் பயிற்சி கொடுத்த டாக்டர் விளாதிமிர் யச்டோவஸ்கி விண்வெளி பயணத்துக்கு முந்தைய நாள் லைக்காவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது குழந்தைகளுடன் விளையாடவிட்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு விண்கலத்தில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறுகிய இடத்தில் மூன்று நாட்களுக்கு முன்னாலேயே லைக்கா அமர்த்தப்பட்டது. பிறகு விண்கலத்தொடு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விண்கலத்தைச் செலுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. லைக்கா சற்று பதற்றமானது. சிறிது நேரத்துக்குப் பிறகு கொஞ்சமாக உணவு உட்கொண்டது.

லைக்காவுக்கான எல்லாவித உயிர் காக்கும் உதவிகளோடு ஸ்புட்னிக்- 2 விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் செலுத்தப்பட்ட சில மணித் துளிகளில் இந்த விண்கலம் திரும்பி வராது என்று சொல்லப்பட்டது. அப்படி என்றால் லைக்காவின் கதி என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

ஒரு வருடத்துக்குப் பின்னால் ஸ்புட்னிக்- 2 வாயு மண்டலத்தில் எரித்து விடப்பட்டது. இந்த செய்தி மேற்கத்திய நாடுகளில் பரவியது. இன்றைக்கும் லைக்கா விண்கலத்தில் எப்போது இறந்தது என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அந்த விண்வெளி ரகசியம் இன்னமும் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டதன் விளைவாக மனிதன் நிலவில் கால் பதிக்க முடிந்தது. லைக்காவின் பயணம் ஒரு துயர சம்பவமாக இருந்தாலும், இந்த 60 ஆண்டுகளில் விண்வெளியில் அளப்பரிய சாதனைகளைப் படைத்திருக்கிறோம். நவம்பர் 4-ம் தேதி லைக்காவின் நாள். லைக்கா ஒரு விண்வெளி சகாப்தம். லைக்காவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்.

கட்டுரையாளர்: அறிவியல் பிரசாரகர்.
தொடர்புக்கு: contactcra@yahoo.com

SCROLL FOR NEXT