விளையாட்டு

FIFA WC 2026: இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

வேட்டையன்

சென்னை: அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒளிபரப்புகிறது. இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் 11-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளது.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த கால்பந்து திருவிழா தொடர் ஒளிபரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஏனெனில், இந்த தொடரை ஒளிபரப்புவது தொடர்பாக ஃபிபா எந்தவொரு ஒளிபரப்பு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தது. அதில் இழுபறி நீடித்ததாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் இந்தியாவில் இந்த தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் தொகை சுமார் 320 கோடி ரூபாய் என தகவல் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரை ஜீ குழுமம் சார்பில் புதிதாக அறிமுகம் செய்துள்ள நான்கு சேனல்களில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜீ நிறுவனத்தின் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் நேரலையில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

இதற்கு முன்பு இந்தியாவில் கால்பந்து உலகக் கோப்பை தொடரை கடந்த 2014, 2018-களில் சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. கடந்த 2022 தொடரை ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இந்த முறை இத்தொடரை ஜீ ஒளிபரப்புகிறது.

SCROLL FOR NEXT