புதுடெல்லி: 2026-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம் புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 67 வீராங்கனைகளை ஐந்து அணிகளும் ஒப்பந்தம் செய்தன.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவை யுபி வாரியர்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியலில் தீப்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணியின் அமெலியா கெர்ரை ரூ.3 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஏலத்தில் மொத்தம் 67 வீராங்கனைகளை ரூ.40.80 கோடிக்கு ஐந்து மகளிர் பிரீமியர் லீக் அணிகளும் ஒப்பந்தம் செய்தன. கடந்த 2023 சீசனை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 87 வீராங்கனைகளை ரூ.59.50 கோடிக்கு வாங்கி இருந்தன. அதன் பின்னர் ரூ.12.75 கோடி மற்றும் ரூ.9.05 கோடியை ஏலத்தில் மகளிர் பிரீமியர் லீக் அணிகள் செலவிட்டன.
மகளிர் பிரீமியர் லீக்: அட்டவணை அறிவிப்பு - நான்காவது மகளிர் பிரீமியர் லீக் சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் உள்ள 5 அணிகளும் தலா இரண்டு முறை மற்ற அணிகளுடன் லீக் சுற்றில் விளையாடும். அதில் முதல் இடம் பிடிக்கின்ற அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கின்ற அணிகள் எலிமினேட்டரில் விளையாடும். அதில் வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறும்.