தலைமை பயிற்சியாளராக ஹரேந்திரா சிங்
புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ஹாக்கி இந்தியாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சொந்த காரணங்களுக்காக ஹரேந்திரா சிங் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆடவர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட ஹரேந்திரா சிங்கை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹாக்கி இந்தியா நியமித்தது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் ஹாக்கி கடந்த ஓராண்டு காலமாக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் புரோ ஹாக்கி லீக்கில் இந்திய மகளிர் அணி 16 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் அடுத்த சீசனுக்கு தகுதி பெறவும் தவறியது. இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் ஹரேந்திரா சிங் விலகியதாகவும் கூறப்படுகிறது. புதிய பயிற்சியாளராக நெதர்லாந்தின் ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
அவரது பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி 2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து இருந்தது. அவர், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.