விளையாட்டு

சரித்திரம் படைக்குமா சூரியகுமார் யாதவ் படை? | குரூப் ‘ஏ’ ஒரு பார்வை

டி20 உலகக் கோப்பை திருவிழா

பெ.மாரிமுத்து

ஐசிசி ஆடவருக்​கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கையில் தொடங்​கு​கிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறும் இந்த டி20 கிரிக்​கெட் திரு​விழா​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​தியா உள்​ளிட்ட 20 அணி​கள் கலந்​து​கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, நமீபி​யா, நெதர்​லாந்​து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணி​கள் இடம் பெற்றுள்ளன. இந்த அணி​கள் குறித்த பார்​வை..

இந்​தி​யா: நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. உலகக் கோப்பை தொடர்​களில் இந்​திய அணி ஒரு​போதும் சாம்​பியன் பட்டத்தை தக்​க​வைத்​தது இல்​லை. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் தொடரை நடத்​தும் நாடு இது​வரை கோப்​பையை தக்​க​வைத்​ததும் கிடை​யாது. மேலும் எந்த அணி​யும் 3 முறை கோப்​பயை கைகளில் ஏந்​தி​யது இல்லை. ஆனால் இம்​முறை இந்த வரலாற்றை இந்​திய அணி மாற்றி எழுதக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

2007 மற்​றும் 2024-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி சமீபத்​திய ஐசிசி டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்​கிறது. பேட்​டிங் ஆர்​டரில் 8-வது வரிசை வரை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​பது பெரிய பலமாக பார்க்​கப்​படு​கிறது. டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா எந்த வகையி​லான பந்​து​வீச்​சை​யும் வெளுத்து வாங்கக்​கூடிய வீர​ராக திகழ்​கிறார். சர்​வ​தேச டி 20 அரங்கில் 38 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 2 சதங்கள், 8 அரை சதங்​களு​டன் 1,297 ரன்​கள் குவித்துள்ளார்.

          

டி20 சர்​வ​தேச போட்​டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் பிரம்​மாண்​டான வகை​யில் 194.74 ஆக உள்​ளது. இதனால் இம்​முறை டி 20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்​மா, பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய வீர​ராக திகழக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதே​போன்றே இஷான் கிஷனும் பேட்​டிங்​கில் மிரட்​டக்​கூடிய வீர​ராக உரு​வெடுத்​துள்​ளார். நியூஸிலாந்​துக்கு எதிரான கடைசி டி 20 போட்​டி​யில் அவர், 43 பந்​துகளில் 103 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார். இஷான் கிஷனும், அபிஷேக் சர்​மா​வும் முதல் பந்​தில் இருந்தே அடித்து விளையாடும் திறனை கொண்​டிருப்​பது டாப் ஆர்​டருக்கு பெரிய பலமாக உள்​ளது. இவர்​களு​டன் சஞ்சு சாம்​சனும் மட்​டையை சுழற்​றத் தொடங்​கி​னால் இந்​திய அணி அசுர பலம் பெறும்.

சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டி​யா, அக்​சர் படேல், ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோ​ரும் ஆட்​டத்​தின் போக்கை தங்​களது அதிரடி​யால் எந்த நேரத்​தி​லும் மாற்றும் திறன் கொண்​ட​வர்​கள். காயத்​தில் இருந்து மீண்​டு​வந்​துள்ள திலக் வர்​மா​வும் அதிரடி ஆட்​டத்தை வெளிப்படுத்​து​வ​தில் சளைத்​தவர் இல்​லை.

2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் இந்​திய அணி முதலில் பேட் செய்த ஆட்​டங்​களில் மிகப்​பெரிய அளவில் ரன்​களை வேட்​டை​யாடி உள்​ளது. அதேவளை​யில் சமீப​கால​மாக 200 ரன்​களுக்கு மேலான இலக்கை எளி​தாக 15 ஓவர்​களுக்​குள்​ளேயே வெற்றிகரமாக கடந்​துள்​ளது.

பந்​து​வீச்​சிலும் இந்​திய அணி சமநிலை​யுடன் இருக்​கிறது. வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் சர்​வ​தேச டி 20 அரங்​கில் 100 விக்​கெட்​களுக்கு மேல் வீழ்த்தி உள்​ளனர். அர்​ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்களிலும், பும்ரா இறு​திக்​கட்ட ஓவர்​களில் நேர்த்​தி​யாக செயல்​படக்​கூடிய​வர்​கள்.

இவர்​களுக்கு உறு​துணை​யாக​வும் 3-வது பிர​தான வேகப்பந்து வீச்​சாள​ராக​வும் ஆல்​ர​வுண்​டர் ஹர்​திக் பாண்டியா திகழ்​கிறார். இவரும் சர்​வ​தேச டி 20 அரங்​கில் 100 விக்​கெட்​களுக்கு மேல் சாய்த்​துள்​ளார். மேலும் ஹர்ஷித் ராணா​வும் அணி​யில் இருப்​பது கூடு​தல் பலம். மிதவேக பந்​து​வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான ஷிவம் துபே​வும் நம்பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக திகழ்​கிறார்.

சுழற்​பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் வருண் சக்​ர​வர்த்தி நடு ஓவர்​களில் மாயா ஜாலங்​கள் நிகழ்த்​தக்​கூடிய​வர். 36 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 59 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். இடதுகை மணிக்​கட்டு சுழற்​பந்து வீச்சாள​ரான குல்​தீப் யாத​வும் பலம் சேர்ப்​பவ​ராக உள்ளார். 53 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 94 விக்கெட்​களை கைப்​பற்றி உள்​ளார்.

எனினும் இவர்​கள் இரு​வரும் சமீபத்​தில் நடை​பெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டி 20 தொடரில் தாக்கத்தை ஏற்​படுத்​தத் தவறினர். ஆனால் அதில் இருந்து பாடம் கற்​றுக்​கொண்டு வருண் சக்​ர​வர்த்​தி​யும், குல்​தீப் யாத​வும் மீண்​டு​வரக்​கூடும். 3-வது சுழற்​பந்து வீச்​சாள​ராக ஆல்​ர​வுண்​ட​ரான அக்​சர் படேல் உள்​ளார். அவர், 83 விக்கெட்​களை வீழ்த்தி உள்​ளார்.

4-வது சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக இருக்​கும் வாஷிங்டன் சுந்​தர் கடைசி நேரத்​தில் காயம் அடைந்துள்ளார். 51 விக்​கெட்​களை கைப்​பற்றி உள்ள அவர், முழு உடற்​தகு​தியை பெறு​வா​ரா? என்​பது சந்​தேக​மாகவே உள்​ளது. ஒரு​வேளை அவர், உலகக் கோப்​பையை தவற​விட்​டால் ரவி பிஷ்னோய்க்கு அதிர்​ஷ்டம் கிடைக்​கக்​கூடும்.

பேட்​டிங், பந்து வீச்​சில் இந்​திய அணி​யில் சுட்​டிக்​காட்​டும் வகை​யில் பலவீனங்​கள் தென்​பட​வில்​லை. ஜஸ்​பிரீத் பும்ரா​வின் உடற்​தகுதி மட்​டுமே சிறிது அச்​சம் கொள்​ளும் வகை​யில் உள்​ளது. ஏனெனில் சமீப​கால​மாக அவர், அதிக அளவி​லான போட்​டிகளில் விளை​யாட​வில்​லை. அவ்​வவ்​போது அவருக்கு சில ஆட்​டங்​களில் ஓய்வு கொடுக்கப்பட்டு வரு​கிறது. இந்த பாணியை இந்​திய அணி லீக் சுற்​றி​லும் கடைபிடிக்​கக்​கூடும்.

103-ல் 71 வெற்றி

சொந்த மண்​ணில் இந்​திய அணி இது​வரை 103 சர்​வதச டி20 போட்​டிகளில் விளை​யாடி உள்​ளது. இதில் இந்​திய அணி 71 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது. 30 ஆட்​டங்​களில் தோல்வி கண்​டுள்​ளது. 2 ஆட்​டங்​களில் முடிவு இல்லை.

சஞ்சு சாம்​சனுக்கு சிக்​கல்

டி20 உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி​யில் சஞ்சு சாம்​சனுக்​காகவே ஷுப்​மன் கில் நீக்​கப்​பட்டு இருந்தார். ஆனால் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான 5 ஆட்டங்​கள் கொண்ட டி 20 தொடரில் சஞ்சு சாம்​சன் ஒட்டுமொத்​த​மாக 9.20 சராசரி​யுடன் 46 ரன்​களே சேர்த்​திருந்​தார்.

தற்​போது 3-வது வரிசை​யில் திறம்பட செயல்​படக்​கூடிய திலக் வர்மா அணிக்கு திரும்பி உள்​ளார். இந்த இடத்​தில் இஷான் கிஷன் விளை​யாடி வரு​கிறார். இதனால் சஞ்சு சாம்​சன் இடத்​துக்கு சிக்​கல் எழுந்​துள்​ளது. டி 20 உலகக் கோப்​பை​யின் தொடக்க ஆட்​டங்​களில்​ சஞ்​சு சாம்​சன்​ பார்​முக்​கு வரவில்​லை என்​றால்​ அவரது இடத்​தை இஷான்​ கிஷன்​ கைப்​பற்றக்கூடும்.

நமீபி​யா

நமீபியா அணி தொடர்ச்​சி​யாக 4-வது முறை​யாக ஐசிசி டி20 உலகக் கோப்​பை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி அதி​கபட்​ச​மாக அறி​முக​மான 2021-ம் ஆண்டு சூப்​பர் 12 சுற்றுக்கு முன்​னேறி இருந்​தது. அப்​போது அந்த அணி நெதர்​லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​திருந்​தது. இம்முறை​யும் இந்த இரு அணி​களும் லீக் சுற்​றில் நேருக்கு நேர் சந்​திக்க உள்​ளன.

கெர்ஹார்ட் எராஸ்மஸ்

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா தனது முதல் ஆட்​டத்​தில் ஓமன் அணியை சூப்​பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்​றிருந்​தது. அந்​தப் போட்​டி​யில் ரூபன் ட்ரம்​பெல்​மேன் நான்கு விக்கெட்​டு​களை வீழ்த்தி அசத்​தி​யிருந்​தார்.

முன்​னாள் வீர​ரான 41 வயதான கிரெய்க் வில்​லி​யம்ஸ் அந்த அணி​யின் பயிற்​சி​யாள​ராக மாறி உள்​ளார். நமீபியா அணி இதற்கு முன்​னர் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணிகளுக்கு எதி​ராக தலா ஒரு முறை மோதி உள்​ளது. இதில் அந்த அணி தோல்வி​களையே சந்​தித்​துள்​ளது. மேலும் அமெரிக்கா​வுக்கு எதி​ராக 2 முறை​யும் அந்த அணி தோல்வி கண்​டுள்​ளது.

நெதர்​லாந்​து

நெதர்​லாந்து அணி 7-வது முறை​யாக டி 20 உலகக் கோப்பை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி 2 முறை லீக் சுற்றை கடந்து அடுத்து சுற்​று​வரை முன்​னேறி இருந்​தது. இதில் 2022-ம் ஆண்டு தொடரில் அந்த அணி​யின் பந்​து​வீச்சாளர் பாஸ் டி லீட் 13 விக்​கெட்​களை வீழ்த்தி அதிக விக்கெட்​கள் வீழ்த்​தி​ய​வர்​களின் பட்​டியலில் 2-வது இடம் பிடித்து இருந்​தார்.

ஸ்காட் எட்வர்ட்ஸ்

அதேவேளை​யில் பேட்​டிங்​கில் மேக்ஸ் ஓ’ட​வுட் 242 ரன்​கள் சேர்த்து அதிக ரன்​கள் குவித்த வீரர்​களின் பட்​டியலில் விராட் கோலிக்கு அடுத்து இடம் பிடித்​திருந்​தார். இவர்​கள் இரு​வரும் தற்​போதைய நெதர்​லாந்து அணி​யிலும் இடம் பெற்​றுள்​ளனர். 40 வயதான ரோல்ஃப் வான்​டர் மெர்வி தனது அனுபவத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும்.

பாகிஸ்​தான்

2009-ம் ஆண்டு சாம்​பிய​னான பாகிஸ்​தான் சல்​மான் அலி ஆகா தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. 2024-ம் ஆண்டு தொடரில் பாகிஸ்​தான் அணி​யானது லீக் சுற்​றில் இந்​தி​யா, அமெரிக்க அணி​களிடம் தோல்வி அடைந்​த​தால் முதல் சுற்றுடன் மூட்டை கட்​டி​யிருந்​தது.

சல்​மான் அலி ஆகா

டி20 தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள பாகிஸ்​தான் அணி இம்​முறை லீக் சுற்​றில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்டத்தை புறக்​கணிக்​கப் போவ​தாக தெரி​வித்​துள்​ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி இந்தியா​வுக்கு எதி​ராக 8 முறை விளை​யாடி உள்​ளது.

இதில் அந்த அணி 7 முறை தோல்வி​களை சந்​தித்​துள்​ளது. இம்​முறை அந்த அணி தனது அனைத்து ஆட்​டங்​களை​யும் முற்​றி​லும் சுழலுக்கு சாதக​மான இலங்கை ஆடு​களங்​களில் விளை​யாடு​கிறது. பந்து வீச்​சில் நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்​ரிடி பலம் சேர்க்​கக்​கூடும். அனுபவம் வாய்ந்த பாபர் அஸம் மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது.

அமெரிக்​கா

2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பை​யில் தனது சொந்த மண்​ணில் அமெரிக்க அணி கவனத்தை ஈர்க்​கும் வகையிலான செயல் திறனை வெளிப்​படுத்தி இருந்​தது. அதை தற்​போது வெளி​நாட்டு மண்​ணிலும் நிரூபித்​துக் காட்ட முயற்​சிக்​கக்​கூடும்.

கடந்த முறை கனடா, பாகிஸ்​தான் அணி​களை வீழ்த்தி அமெரிக்க அணி லீக் சுற்​றில் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது. ஆனால் அந்த சுற்​றில் அந்த அணி 3 ஆட்​டங்​களி​லும் தோல்வி அடைந்து ஏமாற்​றம் அளித்​தது. அதன் பின்​னர் அமெரிக்க அணி வட அமெரிக்கா டி 20 கோப்​பை​யில் கனடா அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது.

மோனங்க் படேல்

கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் ஓமன் அணிக்கு எதி​ரான இருதரப்பு டி 20 தொடரை 3-0 என வென்று அசத்தியிருந்தது. கடந்த முறை போன்று இம்​முறை​யும் மோனங்க் படேல் கேப்​ட​னாக அணியை வழிநடத்​துகிறார். 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மோனங்க் படேல் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக அரை சதம் அடித்து கவனம் ஈர்த்​திருந்​தார்.

ஐசிசி டி 20 பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள சைதேஜா முக்​கமல்லா மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. 21 வயதான அவர், சர்​வ​தேச டி 20 மற்​றும் ஒரு​நாள் போட்​டி​யில்​ சதம்​ அடித்​துள்​ளார்​. டி20 போட்டிகளில்​ அவரது ச​ராசரி 42.60 ஆக உள்ளது.

SCROLL FOR NEXT