பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. பேட்டிங்கில் டாப் 5-ல் களமிறங்கும் வீரர்கள் தங்களது அதிரடியால் பலம் சேர்த்து வருகின்றனர். விராட் கோலி 162, பில் சால்ட் 178, ரஜத் பட்டிதார் 214, டிம் டேவிட் 221, தேவ்தத் படிக்கல் 201 ரன்கள் விளாசி சிறந்த பார்மில் உள்ளனர்.
இவர்கள் 4 ஆட்டங்களில் கூட்டாக 52 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளனர். நடப்பு சீசனில் இந்த அளவுக்கு எந்த அணிகளும் சிக்ஸர்களை விளாசவில்லை. இதன் விளைவாக, இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அந்த அணி 200 ரன்களுக்குக் குறைவாக எடுத்ததே இல்லை. இன்று லக்னோ அணிக்கு எதிராக மோதும் ஆர்சிபி அணி இதன் தொடர்ச்சியாக சொந்த மைதானத்தில் வரும் 18-ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும், 24-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் மோதுகிறது.
இதனால் அடுத்தடுத்து வெற்றிகளை குவிப்பதில் ஆர்சிபி அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். எனினும் சின்னசாமி மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக ஆர்சிபி அணியின் ஆதிக்கம் தொடருமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி உள்ளனர். அவருடன் வேகப்பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவும் சுழலில் திக்வேஷ் ராதியும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள்.
இந்த பந்துவீச்சு கூட்டணி நடப்பு தொடரில் எதிரணிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தி அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. முகமது ஷமி ஓவருக்கு சராசரியாக 6.2 ரன்களையே விட்டுக்கொடுத்துள்ளார். நடப்பு தொடரில் இதுவே மிகச்சிறந்ததாக உள்ளது. இருப்பினும், பெங்களூருவின் தட்டையான ஆடுகளத்தில் ஆர்சிபி பேட்டர்களுக்கு எதிராக இந்த மூவர் கூட்டணியும் ஒவ்வொரு பந்தையும் மிகத் துல்லியமாக வீச வேண்டியது அவசியம்.
பந்துவீச்சாளர்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும்போதிலும், லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில்தான் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் உத்வேகம் இன்றி மந்தமாக விளையாடி வருவதுதான். லக்னோ அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியின் பேட்டிங் வரிசை இன்னும் முழுமையான ஃபார்மிற்கு வரவில்லை. கேப்டனின் தற்போதைய ஃபார்மே அதைத் தெளிவாக உணர்த்துகிறது. 4 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பந்த் 130 ஸ்ட்ரைக்ரேட்டில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் போன்ற நட்சத்திர வீரர்களும், ஆயுஷ் பதோனி மற்றும் அப்துல் சமத் போன்ற இளம் வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளையாடி வெற்றி தேடிக் கொடுத்திருந்தார். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடி ஆட்டத்தில் முகுல் சவுத்ரி 14 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்தார். அணியின் வெற்றிக்கு உதவவேண்டுமெனில் அவர் சீரான வேகத்தில் ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம்.