ரோஹித் சர்மா 
விளையாட்டு

மேக்ஸ்வெல்லின் ‘டக்’ சாதனையை முறியடிக்கப் போவது ரோஹித்தா, சுனில் நரைனா? | ஐபிஎல் சுவாரஸ்யங்கள்

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் தொடர்களில் அதிக ‘டக்’குகளை எடுத்தவர் யார் என்ற கேள்வி எழுவது நியாயம். அதிலும் அதில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் அத்தகு எதிர்மறைச் சாதனையை வைத்திருப்பதும், அதை டாப் இந்திய வீரர் முறியடிக்கும் எதிர்மறை சாதனைக்குரிய நிலையில் இருப்பதும் ஆச்சரியமே.

ஐபிஎல் தொடர்களில் இதுவரை 19 முறை டக் அவுட் ஆகி ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார், இந்த ஐபிஎல் சீசனில் அவர் இல்லை. இவருக்கு அடுத்த இடத்தில் இன்னொரு இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் 18 டக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். இவரும் ரிட்டையர் ஆகிவிட்டார்.

எனவே, தற்போதைய ஐபிஎல் தொடரில் 18 டக்குகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் வீரராக ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மா 3-ம் இடத்தில் இருக்கிறார். 2 டக்குகள் போதும், இவர் முதலிடம் சென்று விடுவார்.

          

அதேபோல் சுனில் நரைன் ஐபிஎல் தொடர்களில் 17 டக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். ஆகவே, நடப்பு ஐபிஎல் தொடரில் டக்குகளில் முதலிடம் பிடிக்கப்போவது ரோஹித் சர்மாவா, சுனில் நரைனா என்ற சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடர்களில் 20 விக்கெட்டுகள் விழுந்த போட்டி இருக்கிறதா என்பதை நாம் இப்போதைய அதிரடி பாணி கிரிக்கெட்டில் மறந்திருப்போம்.

1,000-க்கும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றும் கூட 5 முறை மட்டுமே ஒரு போட்டியின் 20 விக்கெட்டுகளும் விழுந்துள்ளன என்கிறது ஐபிஎல் புள்ளி விவரங்கள்.

இதில் முதன்மையான போட்டி 2010 ஐபிஎல் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் போட்டி மிகுந்த சுவாரஸ்யமான போட்டியாக அமைந்தது. ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, டெக்கான் சார்ஜர்ஸ் ஷேன் வார்னின் 4 விக்கெட்டுகளினால் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2017 ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு நேர்ந்த அவமானகரமான தோல்விப் போட்டியிலும் 20 விக்கெட்டுகள் விழுந்தன. ஈடன் கார்டன்சில் நடைபெற்ற கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் 131 ரன்களுக்குச் சுருள, ஆர்சிபி வெறும் 49 ரன்களுக்குச் சுருண்டது.

2018-ல் மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வான்கடேயில் 20 விக்கெட்டுகள் சாய்ந்தன. இன்னொரு போட்டி 2014-இல் இதே வான்கடேயில் மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் போட்டியில் 20 விக்கெட்டுகளும், கடந்த ஐபிஎல் தொடரில் முல்லான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, கேகேஆர் 95 ரன்களுக்குச் சுருண்டதும் நினைவுகொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT