விளையாட்டு

ஸ்பெயின் அணியின் தற்காப்பு அரணை உடைத்து வெற்றி காணுமா பெல்ஜியம்? - கால் இறுதியில் நாளை மோதல்| FIFA WC 2026

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் கால் இறுதி சுற்றை எட்டி உள்​ளது. லாஸ் ஏஞ்​சல்ஸ் மைதானத்​தில் நாளை அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெறும் 2-வது கால் இறுதி ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான ஸ்பெயின், பெல்ஜியம் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

2010-ம் ஆண்டு சாம்​பிய​னான ஸ்பெ​யின் அணி நடப்பு தொடரில் லீக் சுற்​றில் ஒரு டிரா, 2 வெற்​றிகளை பதிவு செய்​திருந்​தது. தொடர்ந்து நாக் அவுட் சுற்​றில் ஆஸ்​திரி​யாவை 3-0 என தோற்​கடித்து இருந்​தது. இதன் பின்​னர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் 1-0 என்ற கணக்​கில் போர்ச்​சுகலை வென்​றிருந்​தது.

வலு​வான ஃடிபென்ஸ் காரண​மாக ஸ்பெ​யின் அணி நடப்பு தொடரில் இது​வரை 6 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள நிலை​யில் எதிரணி​யிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்​க​வில்​லை. கால் இறுதி சுற்​றுக்கு தகுதி பெற்​றுள்ள 8 அணி​களில் ஸ்பெ​யின் மட்​டுமே எதிரணியை ஒரு கோல் அடிக்க விட​வில்​லை.

பெல்​ஜி​யம் அணி போராடியே கால் இறுதி சுற்​றுக்​குள் நுழைந்​துள்​ளது. அந்த அணி லீக் சுற்​றில் 2 ஆட்​டங்​களை டிரா செய்த நிலை​யில் கடைசி ஆட்​டத்​தில் நியூஸிலாந்தை வீழ்த்​தியே நாக் அவுட் சுற்​றுக்கு தகுதி பெற்​றிருந்​தது. நாக் அவுட் சுற்​றில் பெல்​ஜி​யம் அணி செனகலுக்கு எதி​ராக 0-2 என்ற கோல் கணக்​கில் பின்​தங்​கிய நிலை​யில் இருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றிருந்​தது. இதையடுத்து நடை​பெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் தொடரை இணைந்து நடத்​தும் அமெரிக்க அணியை 4-1 என்ற கணக்​கில் பந்​தாடி​யிருந்​தது பெல்​ஜி​யம் அணி.

பெல்​ஜி​யம் அணி​யைப் பொறுத்​தவரை, இந்த உலகக் கோப்பை தொட​ரானது குறிப்​பாக ஒவ்​வொரு நாக்​-அவுட் போட்​டி​யும் அந்த நாட்​டின் புகழ்​பெற்ற ‘கோல்​டன் ஜெனரேஷன்’ வீரர்​களின் கடைசிப் போராட்​டக் களமாகவே பார்க்​கப்​படு​கிறது. பயிற்​சி​யாளர் ரூடி கார்​சியா பெல்​ஜி​யத்​தின் மூத்த வீரர்​களையே பெரிதும் நம்​பி​யுள்​ளார். அணி​யின் கிரியேட்​டிவ் தூணாக கெவின் டி புரூய்​னே​வும், கோல் போஸ்ட்​டின் அசைக்க முடி​யாத இரும்​புச் சுவ​ராக திபோ கோர்ட்​டு​வா​வும், இறு​திக்​கட்ட நேரங்​களில் தாக்​குதல் ஆட்​டத்​தில் மிரட்​டியக்​கூடிய​வ​ராக ரொமேலு லுகாகு​வும் விளங்​கு​கின்​றனர்.

பெல்​ஜி​யம் அணி கடந்த நான்கு உலகக் கோப்​பைகளில் விளை​யாடும் மூன்​றாவது கால் இறு​திப் போட்டி இது​வாகும். உலகக் கோப்பை வரலாற்​றில் ஒட்​டுமொத்​த​மாக இது அவர்​களின் நான்​காவது கால் இறு​தி​யாகும். இதற்கு முன்​பு, பெல்​ஜி​யம் அணி 1986-ல் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்பெ​யினை​யும், 2018-ல் பிரேசிலை​யும் வீழ்த்​தி​யிருந்​தது. 2014-ல் அர்​ஜென்​டி​னா​விடம் தோல்​வியைத் தழு​வியது.

ஸ்பெ​யின் அணிக்கு கால் இறு​திச் சுற்று என்​பது பெரும்​பாலும் சாதக​மான களமாக இருந்​த​தில்​லை. அவர்​கள் தங்​களின் உலகக் கோப்பை வரலாற்​றில் இரண்டு முறை மட்​டுமே இந்​தத் தடையைத் தாண்​டி​யுள்​ளனர் 1950-ல் இறுதி குரூப் சுற்​றுக்கு முன்​னேறிய ஸ்பெ​யின் அணி அதன் பின்​னர் 60 பின்​னர் ஆண்​டு​கள் கழித்​து, 2010-ம் ஆண்டு சாம்​பியன் பட்​டம் வென்ற தொடரில் கால் இறுதி சுற்​றின்​போது பராகு​வேவை வீழ்த்​தி​யிருந்​தது.

மிட்ஃபீல்​டின் அசைக்க முடி​யாத பலமாக ரோட்​ரி​யும், எதிரணி​யின் தடுப்​பாட்​டக் கோடு​களுக்கு இடையே சாதுரிய​மாக பந்​துகளைக் கடத்​தும் பெட்ரி மற்​றும் டானி ஆல்​மோ​வும், இளம் புய​லான லமின்​ யமாலும்​ ஸ்பெ​யின்​ அணிக்​கு பலம்​ சேர்ப்​பவர்​களாக உள்​ளனர்.

கெவின் டி புரூனே: பெல்ஜியத்தின் மூத்த ஆட்ட நாயகனான இவர், டிஃபென்ஸிலிருந்து அட்டாக்கிற்கு பந்தை லாவகமாகக் கடத்தி ஆட்டத்தை வழிநடத்துவதில் வல்லவர்.

ரொமேலு லுகாகு: அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிரட்டிய இவர், ஸ்பெயினின் அசைக்க முடியாத டிஃபென்ஸிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

ரோட்ரி: ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்ட் தூணான இவர், பந்து தங்களுக்குள்ளேயே இருக்கும்படி ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.

லமின் யமால் & நிகோ வில்லியம்ஸ்: இந்த இளம் வேகப்புயல் விங்கர்கள், பெல்ஜியத்தின் இறுக்கமான தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள்.

நேருக்கு நேர்

உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயினும் பெல்ஜியமும் இதற்கு முன்பு இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 1986-ம் ஆண்டு நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பெல்ஜியம் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியிருந்தது.

இதன் பின்னர் 1990-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

SCROLL FOR NEXT