விளையாட்டு

“மேக்ஸ்வெல் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களை விடுவித்தது ஏன்?” - பஞ்சாப் பயிற்சியாளர் பாண்டிங் விளக்கம்

வேட்டையன்

மும்பை: கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விடுவித்தது ஏன் என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் விவரித்துள்ளார்.

வரும் 16-ம் தேதி ஐபிஎல்-2026 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இந்நிலையில், இது குறித்து பாண்டிங் பேசியுள்ளார்.

“மேக்ஸ்வெல் உடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவரது ஆட்டம் மிகவும் பிடிக்கும். கடந்த ஆண்டு அவரது சிறந்த ஆட்டத்தை எங்களால் பெற முடியாமல் போனதும். மேலும், வரும் நாட்களில் எங்கள் அணியின் ஆடும் லெவனில் அவருக்கான இடம் இல்லை என கருதுகிறேன். அதனால் அவர் விடுவிக்கும் முடிவை எடுத்தோம்.

வெளிநாட்டை சேர்ந்த மற்றொரு ஆல்ரவுண்டரான ஆரோன் ஹார்டியை விடுவித்தது துரதிஷ்டவசமானது. அவருக்கும் கடந்த சீசனில் எங்கள் அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த வரிசையில் மற்றொரு வீரராக இருப்பது ஜோஷ் இங்கிலிஸ். கடந்த சீசனின் பிற்பாதியில் தான் ஆடும் வாய்ப்பை பெற்றார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்வரும் சீசன் நடைபெறும் வேளையில் அவர் அணியுடன் இருப்பது சந்தேகம். அதை கருத்தில் கொண்டு இந்த முடிவை செய்தோம்” என பாண்டிங் கூறினார்.

பஞ்சாப் அணி தக்கவைத்த வீரர்கள்: பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங், நேஹல் வதேரா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ யான்சன், ஹர்ப்ரீத் பிரார், சஹல், அர்ஷ்தீப் சிங், முஷீர் கான், அவினாஷ், மிச்சேல் ஓவன், சேவியர் பார்ட்லெட், ஃபெர்குசன், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்குர், விஷ்ணு வினோத்.

விடுவித்த வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, குல்தீப் சென்.

SCROLL FOR NEXT