சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திலும் தோனி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. நடப்பு சீசனில் கணுக்காலில் காயம் அடைந்துள்ள அவர், இதுவரை களமிறங்கவில்லை. பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் தோனி தீவிரம் காட்டி வருகிறார்.
அதேவேளையில் ரன்கள் ஓடுவதில் தோனி சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தோனி களமிறங்குவது தள்ளிப் போகிறது. போட்டிக்கு முந்தைய நாட்களில் களத்தில் பயிற்சியில் ஈடுபடும் தோனி, சக அணி வீரர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். எனினும் போட்டி நடைபெறும் நாட்களில் தோனி மைதானத்துக்கு வருவதை தவிர்த்து விடுகிறார்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: தோனி எப்போதும் அணியின் நலனை விரும்பும் வீரர். அவர், மைதானத்துக்கு வந்தால், அது மற்ற வீரர்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடும் என்று கவலைப்படுகிறார். தோனி மைதானத்துக்கு வந்தால் கண்டிப்பாக கேமராக்கள் அவர் மீதே இருக்கும், ரசிகர்கள் அவருக்காக ஆரவாரம் செய்வார்கள். இதுவே தோனி போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்துக்கு வராமல் இருப்பதன் பின்னணியில் உள்ள காரணம்.
நிச்சயமாக அவர் ஹோட்டல் அறையில் இருந்தபடி போட்டிகளை மிக நெருக்கமாக கவனித்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர், ஓய்வறையில் எங்களுடன் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். தனது அனுபவங்களை வீரர்களுக்கு வழங்குகிறார். ஆனால், மற்ற வீரர்களுக்கு தான் ஒரு கவனச்சிதறலாக இருக்கக்கூடாது என்பதற்காகவே, போட்டி நாளில் மட்டும் தள்ளி இருக்க முடிவு செய்துள்ளார்.
தோனி களமிறங்குவது மும்பை அணிக்கு எதிரான போட்டியா அல்லது அதற்கு அடுத்த போட்டியா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் காயத்தில் இருந்து அவர் வேகமாக மீண்டு வருகிறார். தோனியின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன்களின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஒரு இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் மிக வேகமாக ஓடி எடுக்க வேண்டிய ரன்களுக்கு தேவையான வலிமை அவரிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது உள்ளது.
தனது கெண்டைக்கால் தசை மீது அவருக்கு முழு நம்பிக்கை வந்தவுடன், அவர் விளையாடுவதற்குச் சம்மதம் தெரிவிப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது நாங்கள் அவரது முடிவிற்காகவே காத்திருக்கிறோம். ஒட்டுமொத்த சென்னையும் காத்திருக்கிறது. அனைத்து ரசிகர்களும் அவர் வருவார் என்று நம்பிக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.