சிஎஸ்கே அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நேற்று அபார வெற்றி பெற்றது. ஆனால் 3 விக்கெட்டுகள் விழுந்தும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் இறங்கவில்லை. பண்ட் ஏன் இறங்கவில்லை என்பது இன்று பேசுபொருளாகியுள்ளது.
12-வது ஓவரில் 135/0 என்று இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அடுத்தடுத்து 9 ரன்களில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. நிகோலஸ் பூரன் முதல் டவுனில் இறங்கினார், அவருக்குப் பிறகு அப்துல் சமது இறங்கினார், பிறகு பண்ட் இறங்குவார் என்று பார்த்தால் முகுல் சவுத்ரி இறங்கினார். எப்படியோ லக்னோ மிட்செல் மார்ஷ் அதிரடியின் பின்னணியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பைச் சிக்கலாக்கியுள்ளது.
தான் இறங்காதது பற்றி ரிஷப் பண்ட் நேற்று கூறும்போது, “நான் இறங்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் வேறு யோசனையும் எழுந்தது. இந்த ஐபிஎல் தொடரில் அணியில் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. திரும்பத் திரும்ப நான் யோசித்தேன் நான் இறங்குவதா அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்களை இறக்குவதா என்று களத்தில் இறங்கி பினிஷ் செய்யத்தான் எனக்கு விருப்பம். ஆனால் அணியின் நலன்களை யோசிப்பவர்களுக்கு நானும் கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டும் அல்லவா?
இரண்டு ஓவர்சீஸ் பிளேயர்களை தொடக்கத்தில் இறக்கி நிகோலஸ் பூரனை ஒன் டவுனில் இறக்குவதுதான் திட்டம். ஆனால் சில வேளைகளில் நாம் நினைப்பதைச் செயல்படுத்த முடியாது. ஒரு அணியாக நம்மிடம் இருக்கும் வளங்கள் குறித்து பெருமையாக உள்ளது. ஆனால் சில வேளைகளில் சிலபல யோசனைகள் குறுக்கிட்டு நாம் நினைத்ததைச் செய்ய முடியாமல் போகும். இது வெறுப்பேற்றும்தான்.
எங்கள் அணியின் பிரச்சினையே அதிகமான யோசனைகளின் நெரிசலே. நிறைய பேர் யோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தால் மைதானத்தில் கடினமாகி விடும்.” என்றார். அவர் சொல்வது சரிதான். டாம் மூடி, ஜஸ்டின் லாங்கர் இரு ஆஸ்திரேலியர்களும் ஆற்றலை உறிஞ்சி விடுவார்கள், இதோடு கேன் வில்லியம்சன், பாரத் அருண், லான்ஸ் குளூஸ்னர், ரியான் குக் என்னும் அசிஸ்டெண்ட் கோச், கார்ல் குரோ என்னும் ஸ்பின் பவுலிங் கோச் என்று ஆதரவுக் குழுக்களில் நபர்கள் அதிகம். ஆகவே ரிஷப் பண்ட் கூறுவது போல் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனையைக் கூறிக்கொண்டிருந்தால் சரிவராது என்றே தோன்றுகிறது.