விளையாட்டு

இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்புகள் எப்படி?

ஆர்.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்று ஒயிட்வாஷ் ஆனது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகளை பெரிய அளவில் பாதித்துள்ளது. 18 போட்டிகளில் 9 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள இந்திய அணி 48.15% உடன் 5ம் இடத்தில் உள்ளது.

மற்ற அணிகளில் சில அணிகள் இன்னமும் இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன் சுழற்சியில் பெருமளவு போட்டிகளில் ஆடவில்லை. குறிப்பாக, நியூசிலாந்து இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடவில்லை. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளன. இங்கிலாந்து இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 2-2 என்று சமன் செய்த பிறகு இப்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. தரவரிசையில் ஆஸ்திரேலியா 100%, தென் ஆப்பிரிக்கா 75% என்று பிரமாதமாக உள்ளன.

அணிகள் 60-65% ரேஞ்சில் இருந்தால்தான் பைனலில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் 2021-23 டபிள்யூ.டி.சி. சைக்கிளில் இந்தியா 58.8% உடன் இரண்டாவது அணியாக இறுதியில் ஆடியது. இப்போது இந்திய அணி 60%-ல் முடியவேண்டுமெனில் 130 புள்ளிகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றில் 18 போட்டிகளில் ஆட வேண்டும் என்பதால் ஆட்டத்திற்கு 12 புள்ளிகள் என்றால் 216 புள்ளிகள் உள்ளது. 12 புள்ளிகள் வெற்றிக்கு, ட்ராவுக்கு 4 புள்ளிகள். இந்தியா இப்போது 9 டெஸ்ட்களில் ஆடி முடித்து விட்டதால் மீதமுள்ள 9 போட்டிகளில் 78 புள்ளிகளை எடுக்க வேண்டியுள்ளது.

இதில் இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகளும் நியூஸிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளும் உள்ளன. இரண்டுமே கடினம் ஏனெனில், இங்கேயே தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்தின் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியாத போது இலங்கையின் குழிப்பிட்ச்களில் எப்படி வெற்றி பெற முடியும் என்பது கேள்வி. ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் உள்ளன. ஆக 9 டெஸ்ட்களும் கடினமே.

இந்த 9 டெஸ்ட்களில் 6-ல் வென்று 2 போட்டிகளில் ட்ரா செய்தால் 80 புள்ளிகள் கிட்டும். 7 வெற்றிகள் என்றால் 84 புள்ளிகள் கிடைக்கும். இலங்கைக்கு எதிராக கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையில் இந்தியா வென்று நல்ல ரெக்கார்ட் வைத்திருந்தாலும் நியூஸீலாந்தில் வெல்வது கடினம். அப்படியே இந்த 2 தொடரிலும் இந்தியா வென்று விட்டது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இன்னும் புள்ளிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கும்.

ஆஸ்திரேலியா இந்த சுற்றில் 4 -ல் 4 வெற்றி என்று அற்புதமாகத் தொடங்கியுள்ளது. இந்தச் சுற்றில் மேலும் பங்களாதேஷ், நியூஸிலாந்துடன் அவர்கள் சொந்த மண்ணில் 6 டெஸ்ட்கள் நடைபெறுவதால் நிச்சயம் அவர்கள் மீண்டுமொரு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவும் 4 டெஸ்ட்களில் 3 வெற்றிகளுடன் நன்றாக உள்ளது. இவர்களுக்கு ஒரேயொரு அயல்நாட்டுத் தொடர்தான் பாக்கி, அது இலங்கையில். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய பலப்பரீட்சை என்னவெனில் தங்கள் சொந்த நாட்டில் ஆடினாலும் 6 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட வேண்டும். 2 டெஸ்ட்கள் பங்களாதேஷுடன் உள்ளது. 8 மீதமுள்ள டெஸ்ட்களில் 41 புள்ளிகள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா 60% நிலைக்கு உயரும்.

மற்ற அணிகள் எப்படி ஆடும் என்பது ஒருபுறம் இருக்க, உள்நாட்டுத் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைவதால் இந்தமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஒரு பெரும் கனவாக மட்டுமே இருக்க முடியும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT