ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகள் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதேவேளையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அமிர் ஜாங்கூ 233 ரன்களும், கேப்டன் ராஸ்டன் சேஸ் 194 ரன்களும் விளாசினர். 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் 31.2 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 43, சோனல் தினுஷா 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 4, ஜெய்டன் சீல்ஸ் 3, ஷமர் ஜோசப் 2, அல்சாரி ஜோசப் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.