விளையாட்டு

ஹோப் சதம்: இந்தியாவை 24 ரன்களில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள் | 4-வது டி20 ஆட்டம்

வேட்டையன்

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி உடனான 4-வது டி20 ஆட்டத்தை 24 ரன்களில் வென்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் விளாசினார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முன்னதாக, நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது இரண்டு அணிகளும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. முதல் மூன்று ஆட்டங்களில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நான்காவது டி20 ஆட்டம் புதன்கிழமை (அக்.14) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.

இதில் ஷாய் ஹோப் 50 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இறுதிவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரூதர்போர்ட் 49, ஹெட்மயர் 33, பவல் 24 மற்றும் ஆண்ட்ரூ 21 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப், பிரின்ஸ் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

248 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும் களத்துக்கு வந்த இஷான் கிஷன், 6 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஷ்ரேயஸ் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அபிஷேக் சர்மா 29 ரன்களில் வெளியேறினார். நமன் திர், ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா மற்றும் நிதிஷ் ரெட்டி இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்த நிலையில், 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து திலக் வர்மா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் நிதிஷ், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இடது கையில் பந்து தாக்கிய காரணத்தால் அர்ஷ்தீப் ஆட்டத்தை தொடராமல் வெளியேறினார்.

இந்தியா 19.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் கீமோ பால், 5 விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் கைப்பற்றினார்.

24 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் இப்போது 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. வரும் 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் 5-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெறுகின்ற அணி இந்த தொடரை வெல்லும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT