கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் உள்ள இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று ஸ்காட்லாந்துடன் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மயர் 36 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். முன்னதாக அவர், தனது அரை சதத்தை 22 பந்துகளில் கடந்திருந்தார். தொடக்க வீரரான பிரண்டன் கிங் 35, கேப்டன் ஷாய் ஹோப் 19, ரோவ்மன் பவல் 24, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 26, ரோமாரியோ ஷெப்பர்டு 6 ரன்கள் சேர்த்தனர். ஸ்காட்லாந்து அணி தரப்பில் பிராடு பிராட் கர்ரி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
பவர்பிளேவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 பவுண்டரிகளுடன் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 17 பந்துகளில் ரன்கள் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து 10 ஓவர்களின் முடிவில் அந்த அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக விளையாடினார். இதனால் 11 முதல் 15 ஓவர்கள் வரையிலான கட்டத்தில் மட்டும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 72 ரன்களை குவித்து மிரட்டியது. இதனாலேயே அந்த அணி வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிச்சி பெரிங்டன் 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். டாம் புரூஸ் 35, ஜார்ஜ் முன்ஸி 19, மார்க் வாட் 15, பிரண்டன் மெக்முல்லன் 14 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 3 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ரோமாரியா ஷெப்பர்டு கைப்பற்றிய 5 விக்கெட்களில் ஹாட்ரிக் சாதனையும் அடங்கும். அவர், வீசிய 17-வது ஓவரில் ஸ்காட்லாந்து அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்களான மேத்யூ கிராஸ் (11), மைக்கேல் லீஸ்க் (0), ஆலிவர் டேவிட்சன் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயகனாக ஷிம்ரன் ஹெட்மயர் தேர்வானார்.
ஜேசன் ஹோல்டர் 100: ஜேசன் ஹோல்டர் இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டை கைப்பற்றிய போது சர்வதேச டி 20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் என்ற மைல் கல் சாதனையை படைத்தார்.