ஜென்சீ தாண்டி ஜென் ஆல்பாக்களுக்கும் இன்று வைபவ் சூரிய வன்ஷி ஒரு உற்சாகமூட்டும் திரும்பத் திரும்ப பார்க்கத்தூண்டும் ஒரு அதிரடி அவதாரம் என்றால் 70-களில் 80 -களில் விவ் ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய ஒரு ஜீனியஸ் என்றால் மிகையாகாது.
1984-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓல்டு டிராபர்ட் மைதானத்தில் இதே தேதியில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் இன்னிங்ஸ் என்றென்றும் மறக்க முடியாத மீண்டும் யாராலும் ரிபீட் செய்ய முடியாத ஒரு பெரிய இன்னிங்ஸ் என்றால் மிகையாகாது.
அதன் பிறகு ரோஹித் சர்மா 3 இரட்டைச் சதங்களை விளாசியிருக்கலாம். ஆனால் பிட்ச், கண்டிஷன்ஸ், பவுலிங், களவியூகம் ஹெல்மெட் இன்மை ஆகிய காரணங்களால் விவ் ரிச்சர்ட்ஸின் இந்த 189 ரன்கள் இன்னிங்ஸை அடித்துக் கொள்ள முடியாது என்றே கூற வேண்டும்.
இந்த இன்னிங்ஸில் 170 பந்துகளில் ரிச்சர்ட்ஸ் 189 ரன்களை 21 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் எடுத்தார். ஏன் இது மிகப்பெரிய ஒரு நாள் இன்னிங்ஸ் என்றால் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை வெறும் 102 ரன்களுக்கு இழந்து படுமோசமான தோல்வியின் கட்டத்தில் இருந்தது, பிறகு 166 / 9 என்று ஆனது. ஆனால் கடைசியில் விவ் ரிச்சர்ட்ஸ் என்ற தனி மனித ஜீனியஸினால் மே.இ.தீவுகளின் ஸ்கோர் 272 ஆனது.
பாப் வில்லிஸ், இயன் போத்தம், நீல் ஃபாஸ்டர், டெரிக் பிரிங்கிள் போன்ற பவுலர்கள் இருந்தும் ரிச்சர்ட்ஸ் என்னும் தூணை சாய்க்க முடியவில்லை, எல்டின் பாப்டிஸ்ட் என்ற பவுலர் மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டி 26 என்று ரிச்சர்ட்ஸுக்குப் பக்கபலம் கொடுக்க மற்ற எல்லோருமே ஒற்றை இலக்க ஸ்கோரில் அவுட். இங்கிலாந்து தரப்பில் ஜெஃப் மில்லர் 3 விக்கெட்டுகள். போத்தம் 2 விக்கெட்டுகள்.
இங்கிலாந்து இலக்கை விரட்டும்போது 50 ஓவர்களில் 168 ரன்களுக்குச் சுருண்டது. ஆலன் லாம்ப் மட்டும் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கார்னர், ஹோல்டிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த விவ் ரிச்சர்ட்ஸ் பவுலிங்கிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
விவ் ரிச்சர்ட்ஸுடன் கடைசி விக்கெட்டுக்கான 106 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஹோல்டிங் எடுத்தது வெறும் 9 ரன்கள்தான். இங்கிலாந்து தோற்றது 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிசின் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் 106, அதில் 12 தான் ஹோல்டிங் மீதி ரன்கள் அனைத்தையும் ரிச்சர்ட்ஸ் அடித்தார்.
இப்போது சொல்லுங்கள் இது போன்ற ஒரு சர்வதேச ஒரு நாள் இன்னிங்சிற்கு அருகில் வேறு இன்னிங்ஸ்கள் உண்டா ? அதனால் தான் இது கிரேட் இன்னிங்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ் இன்றும் என்றும் கிரேட் பிளேயர்.