சென்னை: சிறப்பான பந்துவீச்சால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பெற்றதும், இங்கு வந்து உங்களுடன் பேசுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சஞ்சு சாம்சன் எதிரணியினரை துணிச்சலாக எதிர்கொண்டு, ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவரது இன்னிங்ஸ் அபாரமாக இருந்தது. அதேபோல் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயும் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் இன்றைய ஆட்டத்தின் முக்கிய அம்சம் பந்து வீச்சுதான் என்று நான் நினைக்கிறேன். நடுவரிசை ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்துவதும், சிறந்த நீளத்தில் (லெந்த்) பந்துகளை ஆக்ரோஷமாக வீசுவதும், வகுத்த திட்டங்களில் உறுதியாக நிற்பதும், ஆட்டத்தை மிகவும் எளிமையாக அணுகுவதும்தான் இன்றைய வெற்றிக்கான காரணங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவே, எங்கள் பந்து வீச்சாளர்களின் இந்த முயற்சி குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சிறப்பாக பந்து வீசிய ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, குர்ஜப்னீத், நூர் அகமது ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள். எங்கள் அணியிலுள்ள பந்துவீச்சு வரிசையில் நிச்சயமாக அந்த தனித்துவமான வீரர் இல்லைதான்.
ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் விவாதிப்பது போல எப்படிச் சிறப்பாகச் செயல்படுவது, எப்படி முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது, எப்படி எதிரணி அடிக்கும் கூடுதல் பவுண்டரிகளைத் தடுப்பது என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது. கடந்த சில போட்டிகளிலும் நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.
ஆனால் ஒன்று அல்லது 2 ஓவர்கள் மட்டும் மிக மோசமாக அமைந்து, 20 அல்லது 25 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்ததே எங்கள் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. எனவே, இன்று நான் கூறியது போல, பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் மிகத் துல்லியமாகச் செயல்பட்டோம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள்
சற்று தடுமாறினோம். ஆனால் அதன்பிறகு, நாங்கள் மிகச் சிறப்பாக மீண்டு வந்தோம் என்று நினைக்கிறேன். சென்னை ரசிகர்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எப்போதும் எங்கள் பின்னால் உறுதுணையாக நிற்கின்றனர். எனக்குப் பல செய்திகளும், நல்வாழ்த்துக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
நாங்கள் எங்கு சென்றாலும், எப்போதும் எங்களுக்கு ஆதரவாக சென்னை ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் எங்களுக்குத் துணை நிற்கின்றனர். வரும் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவிக்க முயல்வோம். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.