சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA தலைவர் கியானி இன்ஃபாண்டினோ, இந்த கோடையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்கான அதிக டிக்கெட் கட்டண நிர்ணயத்தை மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், இறுதிப்போட்டிக்கான சில டிக்கெட் விலைகள் $2 மில்லியனுக்கும் அதிகமாக மறுவிற்பனையில் பட்டியலிடப்பட்டிருப்பதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமலேயே நியாயப்பாட்டை முன் வைத்தார்.
அமெரிக்காவின் ‘மில்கென் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் கான்ஃபரன்ஸ்’ நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பேசிய இன்ஃபாண்டினோ, உலகக் கோப்பை டிக்கெட் விலைகள் கடுமையாக இருப்பது குறித்து பேசினார்.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், டிக்கெட் விலை நிர்ணயம் ‘ரசிகர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்’ என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு முன்பும், உலகக் கோப்பை மூலம் கிடைக்கும் வருவாய் உலகளாவிய கால்பந்து வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவதாக இன்ஃபாண்டினோ வலியுறுத்தியிருந்தார். உலகக்கோப்பைப் போட்டிகள் நெருங்கும் நிலையில், அதிக விலை கொண்ட புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது பொது விற்பனையில் உள்ள பல டிக்கெட்டுகளும் உயர்ந்த விலை பிரிவைச் சேர்ந்தவையாக உள்ளன.
“சந்தை நிலையை நாம் கவனிக்க வேண்டும். உலகிலேயே மிக அதிகமாக வளர்ந்த பொழுதுபோக்கு சந்தை அமெரிக்காவாகும். அதனால் சந்தை விலைகளை நாம் பின்பற்ற வேண்டியுள்ளது. அமெரிக்காவில் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வது சட்டபூர்வமானது. நாம் மிகவும் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்றால், அவை மறுவிற்பனையில் இன்னும் அதிக விலைக்கு செல்லும். உண்மையில், எங்களது டிக்கெட் விலைகள் அதிகம் என்று சிலர் கூறினாலும், மறுவிற்பனை சந்தையில் அவை அதைவிட இரட்டிப்பு விலைக்கு கூட விற்கப்படுகின்றன.
யாராவது இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை $2 மில்லியனுக்கு மறுவிற்பனை தளத்தில் பட்டியலிட்டால், அதனால் டிக்கெட்டின் உண்மையான விலை அதுதான் என்று அர்த்தமில்லை. அதைப் வாங்க யாராவது முன்வருவார்கள் என்பதற்கும் உறுதியில்லை,” என்று இன்ஃபாண்டினோ கூறினார். ஆனால் யாராவது உண்மையிலேயே $2 மில்லியன் கொடுத்து அந்த டிக்கெட்டை வாங்கினால், அவருக்கு சிறந்த அனுபவம் கிடைக்க நான் தனிப்பட்ட முறையில் ஹாட் டாக் மற்றும் கோக் கொண்டு வந்து தருவேன்,” என்று அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.
ஜூன் 11-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான ‘குழு நிலை’ போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் பொதுவிற்பனையில் உள்ளன. அவற்றின் விலை 380 டாலர்கள் முதல் 4,105 டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.