விளையாட்டு

கம்பீரை விமர்சித்து பிறகு உடனேயே புகழ்ந்து அந்தர் பல்டி அடித்த வாட்சன்!

ஆர்.முத்துக்குமார்

அனைத்து வடிவங்களிலும் இந்தியத் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றக் கவுதம் கம்பீர் தகுதியற்றவர் என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முன்னாள் சிஎஸ்கே மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சனும் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி சீரற்ற முறையில் ஆடிவருகிறது என்று விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இந்த விமர்சனத்தின் கறார் சூட்டைத் தணிக்கும் விதமாக அவருக்குப் புகழாரம் சூட்டி அந்தர்பல்டியும் அடித்துள்ளார்.

அணித்தேர்வுக் குளறுபடிகள் என்பதை விட அணித்தேர்வில் அரசியல், ஒருபுறம் அணித்தேர்வுக் குழுவுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது, என்பது அதே வேளையில் 2027 உலகக்கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா, பும்ராவின் தேர்வு குறித்துப் பேசுவது, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரை உட்கார வைத்து அழகுபார்க்கலாமா என்று கேட்டால், தெனாவட்டாக இதை அணித்தேர்வுக்குழுவிடம் கேளுங்கள் என்று பொறுப்புத் துறப்பது என்று அவர் செயல்பாடுகள் அணியின் நலனா அல்லது தனக்கு துதிபாடுபவர்களுக்கு அணியில் இடமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வாட்சனும் எப்பப் பார்த்தாலும் அணியை மாற்றிக்கொண்டே இருப்பது என்பதுதான் இந்திய அணியின் சீரற்ற ஆட்டத்திற்குக் காரணம் என்று கூறுகிறார். அவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதுதான் கம்பீரின் ஒளிவுத் தன்மையிலும் சாத்தியமாகியிருக்கக் கூடிய வெளிப்படைத்தன்மை.

2024-ஆம் ஆண்டின் மத்தியில் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது அணியின் திறமைதானே தவிர கம்பீரின் ரோல் அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. அதைத் தவிர்த்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டில், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடரையும் இந்தியா இழந்தது; அத்துடன் கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திடமும் தோல்விகளைச் சந்தித்தது. மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் பிரைம் வீடியோ யூடியூப் சேனலில் வாட்சன் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் ஆட்டத்தின் சீரற்றத் தன்மையைத் தொடர்ச்சியாகக் காண முடிவதற்குக் காரணம் கம்பீரின் கீழ் அடிக்கடி பேட்டிங் வரிசை கன்னாபின்னாவென்று மாற்றப்படுவதே. அதே போல் வீரர்கள் திடீரென ஒரு போட்டியில் ஆடுகின்றனர், அடுத்த போட்டியில் வேறு வீரர்கள் இறங்குகின்றனர். இப்படி அணியையும் பேட்டிங் வரிசையையும் மாற்றிக் கொண்டே இருந்தால் அணி செட்டில் ஆகவே முடியாது. இதனால்தான் இந்திய அணி சீரற்ற முறையில் ஆடி வருகிறது, என்றார்.

ஆனால் உடனேயே என்ன நினைத்தாரோ, தெரியவில்லை கம்பீரைப் புகழ்ந்தும் கூறியுள்ளார்: “இந்திய அணியின் கட்டமைப்பிற்குள் கம்பீர் பல அற்புதமான விஷயங்களைக் கொண்டு வந்துள்ளார்; இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு ஆதரவளித்ததன் மூலம், அவருக்காக கம்பீர் மிகச் சிறந்த மாற்றங்களைச் சாத்தியமாக்கியுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, டி20 உலகக் கோப்பையின் இறுதிக்கட்டப் போட்டிகளில் சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆக, கம்பீர் பல சிறந்த பங்களிப்புகளை அளித்துள்ளார்.”

இரு கருத்துக்களும் ஒன்றையொன்று நிராகரித்து விடுகிறது. கம்பீரை விமர்சிப்பதில் கறாராக விமர்சனம் செய்ய முடியாமையின், இரு எதிரெதிர் கருத்துக்களின் இடையே ஊசலாடுவதான பெரும்பாலோனோரிடம் காணப்படும் இத்தகைய இரண்டக நிலைதான் கம்பீரிடமோ அல்லது இந்திய கிரிக்கெட்டிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கிறது என்பதை இவர்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்கள்?

SCROLL FOR NEXT