விளையாட்டு

“கொண்டைக்கடலை விற்கவா வந்தீர்கள்?” - பாபர் அஸமை விமர்சித்த வாசிம் அக்ரம்

ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அஸமின் தலைமைத்துவத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டது. தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் நீக்கப்பட்டதுடன், 7 வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்த மாற்றங்கள் குறித்து பாபர் அஸமிடம் கேட்கப்பட்டபோது, “இதுபற்றி எனக்கும் செய்தியாகத்தான் தெரிந்தது” என்று கூறியிருந்தார். மேலும், இது தொடர்பான கேள்விகளை வாரியத்திடம்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த வாசிம் அக்ரம், மான்செஸ்டரில் நடைபெற்ற தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் பாபர் அஸமை கேலி செய்யும் வகையில் கேள்வி எழுப்பினார்.

“பாபர் அஸம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். தெரியவில்லை என்றால், இங்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இங்கிலாந்துக்கு கொண்டைக்கடலை விற்கவா வந்தீர்கள்?” என்று அக்ரம் கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஒரு வீரராகவோ அல்லது ஒரு நபராகவோ நான் நம்புவது என்னவென்றால், உங்கள் தலைவர் அல்லது கேப்டன் உங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், நீங்கள் 100 சதவீதம் உங்களது திறனை வெளிப்படுத்த முடியாது.

நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. எனது கருத்து தவறாகவும் இருக்கலாம். ஆனால், பாபர் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது என்பது எனது கருத்து. நடந்த அனைத்தும் தேவையற்றவை. 2-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பாபர், இனி கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டும் விளையாடுவதாகக் கூறியிருக்க வேண்டும்” என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பாபர் அஸமின் கேப்டன்சி குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களிடையே விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பாபரின் ஆளுமை குறித்து விமர்சித்திருந்த நிலையில், முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் அவரது கேப்டன்சியை “டம்மி கேப்டன்சி” என்று விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT