லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 51 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார்.
அதிலும் திக்வேஷ் ராதி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணியால் போராடக்கூடிய அளவிலான இலக்கை கொடுக்க முடிந்தது. 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு கட்டத்தில் 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
ஹிம்மத் சிங், முகமது ஷமி ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்ட நிலையில் 2-வது பந்தை கார்த்திக் தியாகி நோபாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தும் நோ-பாலானது. பின்னர் மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஹிம்மத் சிங் பவுண்டரி அடித்தார். இந்த வகையில் முதல் 2 பந்துகளில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. 3-வது பந்தில் ஹிம்மத் சிங் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பிரின்ஸ் யாதவ் களமிறங்க 4-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 5-வது பந்தில் முகமது ஷமி ரன் சேர்க்கவில்லை. ஆனால் கடைசி பந்தை ஷமி, லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விளாச லக்னோ அணி 155 ரன்களுடன் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதனால் ஆட்டம் டையில் முடிவடைந்தது. எனவே வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் லக்னோ அணி முதலில் பேட் செய்தது. பார்மில் இல்லாத நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரமுடன் களமிறங்கினார். சுனில் நரைன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரன் போல்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 2-வது பந்தில் ஒரு ரன் சேர்த்தார். 3-வது பந்தை எய்டன் மார்க்ரம் லாங் ஆன் திசையை நோக்கி விளாசினார். அப்போது ரோவ்மன் பவல் எல்லைக்கோட்டுக்கு அருகே பந்தை பிடித்தார்.
ஆனால், தான் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிடுவோம் என்பதை உணர்ந்த அவர், லாங் ஆஃப் திசையில் நின்ற ரிங்கு சிங்கை நோக்கி பந்தை வீசினார். அவர், அதை கச்சிதமாக பிடிக்க லக்னோ அணி அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி பேட் செய்தது.
பிரின்ஸ் யாதவ் வீசிய முதல் பந்தை ரிங்கு சிங் பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு விரட்ட கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு இது தொடர்ச்சியான 5-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
லக்னோ அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைவதற்கு பார்மில் இல்லாத நிக்கோலஸ் பூரனை களமிறக்கியதே காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் நடப்பு சீசனில் நிக்கோலஸ் பூரன் 8 ஆட்டங்களில் விளையாடி 82 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 22 ஆகும். இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: சூப்பர் ஓவரில் சுனில் நரைன் பந்துவீசுவார் என்று எங்களுக்குத் தெரியும்.
உலக கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரை விடவும் நிக்கோலஸ் பூரன், சுனில் நரைனின் பந்துவீச்சை அதிகம் எதிர்கொண்டிருக்கிறார். எனவே சுனில் நரைனின் பந்து வீச்சை எதிர்கொள்ள நிக்கோலஸ் பூரனே சிறந்த தேர்வாக இருப்பார் என்று நாங்கள் உணர்ந்தோம். நிக்கோலஸ் பூரன் நடப்பு தொடரில் இன்னும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது எனக்குத் தெரியும்.
அதை நிக்கோலஸ் பூரனும் ஒப்புக்கொள்வார். ஆனால் சூப்பர் ஓவரை கையாள்வதற்கு நிக்கோலஸ் பூரனே சரியாக இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். எப்போதும் சிறந்த வீரர்களை ஆதரிக்க வேண்டும். நிக்கோலஸ் பூரன் தடுமாறி இருக்கலாம். ஆனால் புள்ளி விவரங்களைப் பார்த்தால், உலகத்தரம் வாய்ந்த ஆஃப்-ஸ்பின்னரான சுனில் நரைனின் பந்துவீச்சை நிக்கோலஸ் பூரனை விட யாரும் சிறப்பாக எதிர்கொண்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அது இந்த ஆட்டத்தில் நிகழவில்லை.
கடந்த சில ஆண்டுகளில், உலகிலேயே நிக்கோலஸ் பூரனை விடச் சிறந்த டி 20 வீரர் யாரும் இருக்க முடியாது. தற்போதைய நிகழ்வு அவரும் ஒரு மனிதர்தான் என்பதைக் காட்டுகிறது.
தன்னம்பிக்கையை நாம் போலியாக உருவாக்க முடியாது. நாங்கள் அனைவரும் முயற்சி செய்கிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் ஒருவருக்கான உண்மையான தன்னம்பிக்கை என்பது தனது செயல் பாடுகளை சரியாகச் செய்வதிலிருந்து மட்டுமே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.சூப்பர் ஓவரில் சுனில் நரைன் பந்தில் போல்டான நிக்கோலஸ் பூரன்.