துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான டேரில் மிட்செல்.
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான 34 வயதான டேரில் மிட்செல் 2 சதம், ஒரு அரை சதம் என 352 ரன்களை வேட்டையாடி இருந்தார்.
இதன் மூலம் தரவரிசையில் 845 புள்ளிகளுடன் டேரில் மிட்செல் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி 795 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராகிம் ஸத்தரன் 764 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ரோஹித் சர்மா ஓர் இடம் பின்தங்கி 757 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.