இந்திய ஸ்டார் பேட்டர் விராட் கோலி அருகில் கூட பாபர் அசாமினால் நெருங்க முடியாது, கோலி மலை என்றால் பாபர் அசாம் மடு என்று விமர்சித்துள்ளார் முகமது கைஃப்.
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாபர் அசாம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அக்சர் படேலிடம் பவுல்டு ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் கடும் சரிவு கண்டு 61 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வி கண்டது.
இந்நிலையில், யூடியூப் சேனல் விவாதத்தில் முகமது கைஃப் கூறியது: “2022 டி20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் இன்னிங்சைப் பாருங்கள். 8 பந்துகளில் 28 ரன்கள், அதுவும் போட்டி முடிவுறும் தறுவாயில். அசாம் 8 பந்துகளில் 16 ரன்கள் கூட எடுக்க மாட்டார். இதுதான் இருவருக்குமான வித்தியாசம்.
புள்ளி விவரங்களை வைத்து நீங்கள் பேசலாம். ஆனால் பாபர் அசாமின் அந்த ரன்கள் எந்தெந்த அணிகளுக்கு எதிராக வந்தது என்று பாருங்கள். எந்தத் தருணத்தில் அவர் அந்த ரன்களை எடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள். அசாமின் அந்த இன்னிங்ஸ்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கிறதா?
இந்த விதத்தில்தான் கூறுகிறேன், விராட் கோலி இமாலயம். சிகரத்தில் அமர்ந்திருக்கிறார். பாபர் அசாம் ஒரு சிறு குன்றில்தான் அமர்ந்திருக்கிறார். இத்தனை பெரிய இடைவெளி! புள்ளி விவரங்களை மட்டும் பார்க்காதீர்கள்.
மேட்ச்- வின்னிங் இன்னிங்ஸ்தான் பேசும். இந்தியா -பாகிஸ்தான் போட்டிகளை பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். ஒன்றிரண்டு போட்டிகளைத் தவிர அவர் இந்தியாவுக்கு எதிராக சொல்லிக் கொள்ளும்படியான ஒரு இன்னிங்ஸை ஆடியதில்லையே. ஒரு வீரர் 10,000 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பதை வைத்து நான் அவரை மதிப்பீடு செய்ய மாட்டேன்.
அதேபோல் எத்தனை ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளார் என்பதும் என் அளவுகோல் அல்ல. அணி சிக்கலில் இருக்கும்போது தாக்கம் ஏற்படுத்தும் எத்தனை இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார் என்பதே அளவுகோல். பாகிஸ்தான் தோற்கும்போது அவர் பேட்டிலிருந்து ரன்கள் வந்துள்ளதா?
அவர் இன்னிங்ஸ் அரையிறுதிக்கோ, இறுதிக்கோ அணியை இட்டுச் சென்றுள்ளதா? அல்லது அவர் பேட்டிங்கினால் கோப்பையை வென்றுள்ளதா? இந்த மதிப்பீட்டு அளவுகோல்களினால்தான் விராட் கோலி உச்சியில் இருக்கிறார், கிரேட் பிளேயராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார் கைஃப்.