விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: கோலி அறிவிப்பு

டெக்ஸ்டர்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராவது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய விராட் கோலி, “இந்திய அணிக்காக நான் விளையாடப்போகும் கடைசி உலகக்கோப்பைத் தொடர் இதுதான். இந்தத் தொடரில் எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்வதே எனது ஒரே இலக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் 10 போட்டிகளில் டி20 வேகத்துக்கு இணையான தீவிரத் தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்து விளையாடுவது பெரும் சவாலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2008-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்து 2015, 2019 (கேப்டனாக) மற்றும் 2023 ஆகிய உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களுடன் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

2024-ல் டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில், 2027 உலகக்கோப்பையுடன் அவரது சர்வதேசக் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரவுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT