விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: உத்தராகண்டை வீழ்த்தியது மும்பை

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தியது.

நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை, உத்தராகண்ட் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, அங்கிரிஷ் ரகுவன்ஷி களமிறங்கினர். இதற்கு முந்தைய போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 155 ரன்கள் குவித்திருந்தார். ஆனால், நேற்றைய போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் ரோஹித்.

அங்கிரிஷ் ரகுவன்ஷி 11, முஷீர் கான் 55, சர்பிராஸ் கான் 55, லாட் 21, ஷர்துல் தாக்குர் 29, ஷம்ஸ் முலானி 48 ரன்கள் குவித்தனர். விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோர் 82 பந்துகளில் அதிரடியாக 93 ரன்களைக் குவித்தார். உத்தராகண்டின் தேவேந்திர சிங் போரா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய உத்தராகண்ட் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியின் யுவராஜ் சவுத்ரி 96, குணால் சண்டேலா 32, ஜெகதீஷா சுஜித் 51 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டது. மும்பை அணி சார்பில் ஷர்துல் தாக்குர், ஓன்கார் துகாராம் தமாலா, முஷீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT