பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியுடன், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி மோதவுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.
அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி கேரளாவை வென்றது. இருந்தபோதும், தொடர்ந்து 4 தோல்வி கண்டதால் கால் இறுதி வாய்ப்பை இழந்து விட்டது தமிழக அணி.
இந்நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகா, மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பா, சி பிரிவில் பஞ்சாப், மும்பை, டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெற்றன.
கால் இறுதிச் சுற்று ஆட்டங்கள் பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்குகின்றன. முதல் கால் இறுதியில் கர்நாடகா, மும்பை அணிகள் மோதவுள்ளன.
அதே நாளில் நடைபெறும் 2-வது கால் இறுதியில் உத்தரபிரதேசம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடும். ஜனவரி 13-ம் தேதி நடைபெறும் 3-வது கால் இறுதியில் பஞ்சாப், மத்திய பிரதேச அணிகளும், 4-வது கால் இறுதியில் டெல்லி, விதர்பா அணிகளும் களமிறங்கவுள்ளன.