பெங்களூரு: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் கர்நாடகா - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 91 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். கேப்டன் சிதேஷ் லாடு 38, சாய்ராஜ் பாட்டீல் 33, அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்கள் சேர்த்தனர். கர்நாடகா அணி சார்பில் வித்யாதர் பாட்டீல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். வித்வத் கவேரப்பா, அபிலாஷ் ஷெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
255 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கர்நாடகா அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தேவ்தத் படிக்கல் 95 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 81 ரன்களும், கருண் நாயர் 80 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் சேர்த்திருந்தனர். முன்னதாக கேப்டன் மயங்க் அகர்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர் மழை காரணமாக போட்டியை மீண்டும் தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் வெற்றியை தீர்மானிக்க ‘விஜேடி’ விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கர்நாடகா அணி வெற்றிக்கு 33 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்திருந்தாலே போதுமானதாக இருந்தது. இதனால் கர்நாடகா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக தேவ்தத் படிக்கல் தேர்வானார். கர்நாடகா அணி, தொடர்ச்சியாக 4-வது முறையாக அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது.
சவுராஷ்டிரா அசத்தல்: மற்றொரு கால் இறுதியில் உத்தர பிரதேசம் - சவுராஷ்டிரா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 77 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்களும், அபிஷேக் கோஷ்வாமி 82 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் விளாசினர். சவுராஷ்டிரா அணி தரப்பில் சேத்தன் சக்காரியா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
311 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 40.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது ஹர்விக் தேசாய் 100, ஷிராக் ஜனி 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தொடர் மழையால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாமல் போனது.
இதனால் ‘விஜேடி’ விதி முறைப்படி வெற்றி தீர்மானிக்கப்டடது. இதில் சவுராஷ்டிரா அணி 40.1 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்திருந்தாலே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது. இதனால் சவுராஷ்டிரா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.