விளையாட்டு

அமை​தி​யாக சாதித்து காட்​டிய வைஷாலி

பெ.மாரிமுத்து

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப்​​பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்​க​னையை தேர்வு செய்​வதற்​கான கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்​ரஸ் நாட்​டின் பாஃ​போஸ் நகரில் நடை​பெற்​றது. இதன் 14-வது மற்​றும் கடைசி சுற்று நேற்​று​முன்​தினம் நடந்​தது.

ஆடவர் பிரி​வில் ஏற்​கெனவே பட்​டம் வெல்​வதை உறுதி செய்​திருந்த உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்த்​ரோவ், சீனா​வின் வெய்​யி​யுடன் டிரா செய்​தார். 14 சுற்​றுகளின் முடி​வில் 10 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்த சிந்த்​ரோவ் உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெற்​றார். அவர், உலக சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் இந்தியா​வின் குகேஷுடன் விளை​யாட இருக்​கிறார்.

மகளிர் பிரிவு கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்டரான ஆர்​.வைஷாலி ரஷ்யா​வின் கேத்​ரினா லாக்னோவை எதிர்​கொண்​டார். வெள்​ளைநிற காய்களுடன் ஆடிய வைஷாலி 48-வது நகர்த்​தலில் வெற்றி பெற்​றார். அவருடன் சவாலுக்கு நின்ற கஜகஸ்​தானின் பிபி​சாரா அசவுபயேவா கடைசி சுற்​றில் இந்​தி​யா​வின் திவ்யா தேஷ்​முக்​குடன் டிரா செய்​தார்.

முடி​வில் வைஷாலி 8.5 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்து சாம்​பியன் பட்​டத்தை கைப்​பற்​றி​னார். இதன் மூலம் கேண்​டிடேட்ஸ் போட்​டி​யில் வாகை சூடிய முதல் இந்​திய வீராங்​கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்​தார். அத்​துடன் ஆண்​டின் இறுதி​யில் நடக்​கும் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்​பியனா சீன வீராங்​கனை ஜூ வென்​ஜூனுடன் மோதும் வாய்ப்​பை​யும் பெற்றுள்ளார்.

கேண்​டிடேட்ஸ் தொடரில் பங்​கேற்ற 8 வீராங்​க​னை​களில், மிகக்​குறைந்த ரேட்​டிங் கொண்ட வீராங்​க​னை​யாகவே தமிழகத்​தின் சென்​னையை சேர்ந்த ஆர்​.வைஷாலி களமிறங்​கி​னார். இருப்​பினும், தனது அமை​தி​யான ஆட்டத்​தின் மூலம் பதில் சொன்ன அவர், ரஷ்​யா​வின் கேத்ரினா லாக்​னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்​றார். வைஷாலி​யின் சகோ​தர​ரான பிரக்​ஞானந்​தா​வும் கேண்​டிடேட்ஸ் தொடரின் போட்​டி​யிட்​டார். ஆனால் அவர், 6 புள்ளி​யுடன் 7-வது இடத்தை பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

பிரக்​ஞானந்​தா​வின் வாய்ப்​பு​கள் மங்​கிய பிறகும் கூட தொடரின் ஒட்​டுமொத்த கவன​மும் வைஷாலி​யின் பக்​கம் திரும்​ப​வில்​லை. தரவரிசை​யில் கடைசி​யாக இருந்​த​போதும் அமை​தி​யாக​வும் அதேவேளை​யில் ஆழமாக​வும் செயல்​பட்ட வைஷாலி முன்​னணி வீராங்​க​னை​களை வீழ்த்தி சாதித்​துள்​ளார்.

இந்த முறை 8.5 புள்​ளி​களு​டன் அவர், கேண்​டிடேட்ஸ் பட்டத்தை வென்​றுள்​ளார். கடந்த ஆண்டு டொராண்டோவில் நடை​பெற்ற கேண்​டிடேட்ஸ் தொடரில் விளை​யாடிய வைஷாலி, 2-ம் இடத்தை பகிர்ந்து கொண்டார். அதன் மூலம் உலக சாம்​பியன்​ஷிப்​பில் பங்கேற்​கும் வாய்ப்பை நூலிழை​யில் தவற​விட்​டிருந்​தார்.

அமை​தி​யும், அளவான பேச்​சுமே நீண்​ட​கால​மாக வைஷாலி​யின் பலமாக இருந்து வரு​கின்​றன. வங்கி கிளை மேலா​ள​ராகப் பணிபுரி​யும் தந்தை மற்​றும் இல்​லத்​தரசி​யான தாய் என ஒரு நடுத்தர வர்க்​கக் குடும்​பச் சூழலே அவரது இந்த குணா​திச​யங்​களைச் செதுக்கியுள்ளது. கோனேரு ஹம்பி மற்​றும் டி.ஹரிகா ஆகியோ​ருக்​குப் பிறகு கிராண்ட்​மாஸ்​டர் பட்​டம் வென்ற மூன்​றாவது இந்​திய வீராங்​கனை என்ற பெரு​மை​யைப் பெற்ற வைஷாலி, எவ்​வித ஆரவார​முமின்றி அமைதியாகத் தனது தரவரிசையை உயர்த்தி இந்த நிலைக்கு முன்​னேறி​யுள்​ளார்.

வைஷாலி தனது சிறு​வயது முதலே பல்​வேறு வயதுப்​பிரிவுப் போட்​டிகளில் ஏராள​மான பட்​டங்​களைக் குவித்துள்​ளர். 2021-ம் ஆண்டு ‘சர்​வ​தேச மாஸ்​டர்’ பட்டத்தைப் பெற்ற அவர், 2022-ல் சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற செஸ் ஒலிம்​பி​யாட் தொடரின் மூலம் அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தார். அங்கு தனி​நபர் பிரி​வில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெண்​கலப் பதக்​கத்தை வென்​றதோடு, இந்​திய அணி வெண்​கலப் பதக்​கம் வெல்​ல​வும் முக்​கியப் பங்​காற்​றி​னார்.

சைப்​ரஸிலும் அதே அமை​தி​யான தன்​னம்​பிக்கை அவரிடம் உறு​தி​யாக இருந்​தது. கேண்​டிடேட்ஸ் தொடரில் அவர், வெற்றி பெற வாய்ப்பு குறைந்த வீராங்கனையாகவே கருதப்​பட்​டார். ஆனாலும் மனம் தளர​வில்லை. அதிர்​ஷ்ட​மும் திறமை​யும் அவர் பக்​கம் இருந்​தன. 2023-ல் சாதித்​தது போல​வே, 2025-ம் ஆண்​டிலும் ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் தொடரை வென்​றதன் மூலமே அவர் இந்த கேண்​டிடேட்ஸ் போட்​டிக்​குத் தகுதி பெற்​றிருந்​தார்.

சைப்​ரஸ் கேண்​டிடேட்ஸ் தொடரில் நார்வே செஸ் சாம்பியன் அன்னா முசிச்​சுக், உலகின் ரேபிட் சாம்​பியன் அலெக்​ஸாண்ட்ரா கோரி​யாச்​சி​னா, உலக பிளிட்ஸ் சாம்பியன் மற்​றும் சீனா​வின் மிகச்​சிறந்த வீராங்கனைகளான ஜூ ஜினர் மற்​றும் முன்​னாள் கேண்​டிடேட்ஸ் வெற்​றி​யாளர் டான் சோங்கி என பல ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு களத்​தில், வெற்றி வாய்ப்பு வைஷாலிக்கு சாதக​மாக இருக்​க​வில்​லை.

மேலும் கடந்த ஆண்டு உலகக் கோப்​பையை வென்ற இந்தி​யா​வின் திவ்யா தேஷ்​முக், வைஷாலியை விட பலமான போட்​டி​யாள​ராக பார்க்​கப்​பட்​டார். ஆனால், வைஷாலி தன்​னைச் சுற்​றி​யிருந்த இத்​தகைய பேச்சுகளைப் பற்​றிச் சிறிதும் கவலைப்​ப​டா​மல், அமைதியாகத் தனது பாதை​யில் பயணித்து முதலிடத்​தைப் பிடித்​துள்​ளார்.

மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து நில​விய நிச்சயமற்ற சூழல் மற்​றும் போர் மண்​டலத்​திற்கு மிக அரு​காமை​யில் சைப்​ரஸ் அமைந்​திருந்த காரணத்​தால், பாதுகாப்பு கருதி இந்​தி​யா​வின் முன்​னணி வீராங்கனையான கோனேரு ஹம்பி இப்​போட்​டியி​லிருந்து வில​கி​னார். இருப்​பினும் வைஷாலி எதற்​கும் அஞ்​சாமல் தனது பாதை​யில் உறு​தி​யாக நின்று பயிற்​சிகளைத் தொடர்ந்​தார்.

2013-ம் ஆண்டு தனது சொந்த ஊரான சென்​னைக்கு உலக சாம்பியன் மேக்​னஸ் கார்ல்​சன் வருகை தந்​த​போது, ஒரு காட்​சிப் போட்​டி​யில் அவரைத் தோற்​கடித்​து, தனது 12 வயதிலேயே தலைப்​புச் செய்​தி​களில் இடம்​பிடித்​தவர் வைஷாலி. இத்​தகைய வரலாற்​றுப் பின்​னணி​யைக் கொண்ட அவர், சைப்​ரஸ் கேண்​டிடேட்ஸ் தொடரில் ஏற்ற இறக்​கங்​கள் நிறைந்த சவாலான பயணத்தை எதிர்​கொண்​டார்.

அவர் ஒரு டிரா, மற்​றும் இரண்டு வெற்​றிகளு​டன் தனது ஆதிக்​கத்​தைச் செலுத்​தத் தொடங்​கி​னார். ஆனால், ஜூ ஜினெரிடம் ஏற்​பட்ட ஒரு தோல்​வி, அவரது முன்னேற்றத்தைச் சற்றே தற்​காலிக​மாகத் தடுத்து நிறுத்தி​யது. இருப்​பினும், இறு​திக்கு முந்​தைய சுற்று வரை வெற்​றி​யாளர் யார் என்​ப​தில் பெரும் போட்டி நில​வியது. வைஷாலி உட்பட இரண்டு வீராங்​க​னை​கள் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்​தில் இருக்க, ஜூ ஜினர் 7 புள்ளிகளு​டன் அவர்​களுக்கு மிக அரு​காமை​யில் பின்​தொடர்ந்து வந்​தார்.

இதனால் பட்​டம் வெல்​லும் வாய்ப்பு இவர்​கள் அனை​வருக்​குமே சமமாக இருந்​தது. அந்த சூழ்​நிலை​யில் கேத்​ரினா லாக்​னோவுக்கு எதி​ராக சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த மிகக்​கடுமை​யான போராட்​டத்​தில் வைஷாலி​யின் அடையாள​மான அமை​தி​யும் நிதான​முமே மேலோங்கிநின்​றன. அந்த ஆட்​டத்​தின் முடிவு​தான், இறுதியில் அவர் உலக சாம்​பியன்​ஷிப் போட்​டிக்​குச் செல்வதை உறுதி செய்​துள்​ளது.

வைஷாலி​யின் அடுத்த இலக்கு உலக சாம்​பியன்​ஷிப் போட்​டி. அங்கே அவருக்கு எதி​ராக சதுரங்​கப் பலகை​யின் மறுபுறம் அமர்ந்​திருக்​கப் போவது, ஐந்து முறை உலக சாம்பியன் பட்​டம் வென்ற சீன வீராங்​கனை ஜூ வென்​ஜுன். 12 வயதிலேயே மேக்​னஸ்​ கார்ல்​சனை வீழ்த்​தி​ய அதே துணிச்​சலுடன்​, ஜூ வென்​ஜுனின்​ 5 ஆண்​டு​கால ஆதிக்​கத்​தை வைஷாலி முறியடிப்​பார் என்று ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது.

SCROLL FOR NEXT