அலெக்ஸ் ஃப்ரீமேன்
சியாட்டல்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஃபோலாரின் பாலோகுன் இடது பக்கத்தில் இருந்து ரிகார்டோ பெப்பியை நோக்கிப் பந்தை அடித்தார். ஆனால், பந்து பெப்பியைச் சென்றடைவதற்கு முன்பாகவே, ஆஸ்திரேலிய டிஃபென்டர் கேமரூன் பர்கெஸ் இடைமறிக்க முயன்றார். இதனால் எதிர்பாராதவிதமாக சுய கோலாக மாறியது.
இதன் காரணமாக அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. 43-வது நிமிடத்தில் அமெரிக்காவின் செர்ஜிகோ டெஸ்ட் அடித்த பந்து ஆறு யார்டு பாக்ஸ் பகுதிக்குள் வர, அதை லாவகமாக தலையால் முட்டி கோலாக்கினார் அலெக்ஸ் ஃப்ரீமேன்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் அமெரிக்கா அணிதரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய அணி கோல் அடிக்க சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அமெரிக்காவின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிக் காயம் காரணமாக விளையாடாத நிலையிலும், அந்த அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அமெரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி துருக்கியுடன் மோதுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு இது நடப்பு தொடரில் முதல் தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் துருக்கியை வென்றிருந்தது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி கடைசி லீக் ஆட்டத்தில் பராகுவே அணியை எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டங்கள்
ஈக்வடார் - குராசோவா
நேரம்: அதிகாலை 5:30
துனிசியா - ஜப்பான்
நேரம்: காலை 9:30
ஸ்பெயின் - சவூதி அரேபியா
நேரம்: இரவு 9:30
நாளைய ஆட்டங்கள்
பெல்ஜியம் - ஈரான்
நேரம்: அதிகாலை 12:30
உருகுவே - கேப் வெர்டே
நேரம்: அதிகாலை 3:30
நியூஸிலாந்து - எகிப்து
நேரம்: காலை 6:30
அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா
நேரம்: இரவு 10:30