துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான அபிக்யான் குண்டு இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அபிக்யான் குண்டு 125 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிக்யான் படைத்தார். தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் வேதாந்த் திரிவேதி 106 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும் சேர்த்தனர். 409 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மலேசியா அணி 32.1 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் மித வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 315 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.
2-வது வீரர்: யு-19 ஆசிய கோப்பை தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 209 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக அரங்கில் யு-19 மட்டத்தில் இரட்டை சதம் விளாசிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிக்யான். இதற்கு முன்னர் ஜிம்பாப் வேக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்விக் 215 ரன்கள் விளாசியிருந்தார்.