நியூயார்க்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு உலகின் நான்கு சிறந்த அணிகள் முன்னேறியுள்ளன. அது குறித்து பார்ப்போம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.
ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா உட்பட 16 அணிகள் வெளியேறின. தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று காலை நிறைவடைந்தது. காலிறுதி சுற்றில் மொராக்கோ, பெல்ஜியம், நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் இந்த சுற்றில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதன் மூலம் இந்த தொடர் அதன் இறுதிச்சுற்றை நெருங்கி உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல நான்கு அணிகளும் கடும் சவால் கொடுக்கும் என்பது உலக கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரையிறுதி ஆட்டங்களின் விவரம்
>> பிரான்ஸ் vs ஸ்பெயின் - உலக கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் வரும் புதன்கிழமை (ஜூலை 15 - இந்திய நேரப்படி) அதிகாலை 12.30 மணிக்கு முதல் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளன. இதில் வெல்லும் அணி ஜூலை 19 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
>> இங்கிலாந்து vs அர்ஜெண்டினா - உலக கால்பந்து தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி, முதலிடத்தில் உள்ள அர்ஜெண்டினாவுக்கு எதிராக வரும் வியாழக்கிழமை (ஜூலை 16) இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதியில் விளையாடுகிறது. இந்த ஆட்டமும் அதிகாலை 12.30 மணிக்கு தொடங்குகிறது.