ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் துணை கேப்டன் ஷஷாங்க் சிங் உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்திஸ்கர் அணியிலிருந்து விலகி அடுத்த உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர் சீசனில் புதுச்சேரி அணியில் ஆடவிருக்கிறார்.
சத்தீஸ்கர் அணிக்காக ஏழு ஆண்டுகள் நீடித்த தனது விளையாட்டு வாழ்க்கையில், ஷஷாங்க் 24 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 29.19 என்ற சராசரியுடன் 905 ரன்களைக் குவித்தார். அவரது 'லிஸ்ட் ஏ' (List A) புள்ளிவிவரங்கள் இன்னும் சிறப்பாக உள்ளன: 31 போட்டிகளில் 927 ரன்கள் (சராசரி 40.30, ஸ்ட்ரைக் ரேட் 111.95) மற்றும் 35 விக்கெட்டுகள். மேலும், அந்த அணிக்காக 42 டி20 போட்டிகளில் விளையாடிய அவர், 129.30 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 653 ரன்களை எடுத்ததுடன், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் 2024 சீசனில் ஒரு ஃபினிஷராக அவர் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி - 164.65 ஸ்டிரைக் ரேட்டில் 354 ரன்கள் (பெரும்பாலும் 5 மற்றும் 6-வது டவுன்களில் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது) எடுத்தார். இதனால் மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் அணியில் தக்க வைக்கப்பட்டார்.
2025-ல் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் அவர் முக்கியப் பங்காற்றினார், ஆனால் ஃபார்ம் சிக்கல்கள், தவறவிட்ட கேட்சுகள் மற்றும் காயம் குறித்த கவலைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சுமாரான சீசனையே அவர் கொண்டிருந்தார்.
“புதுச்சேரி ஒரு புதிய தொடக்கம், காயங்களிலிருந்து முழுமையாக மீண்ட பிறகு, 'ஒயிட்-பால்' கிரிக்கெட்டில் எனது திறமையை மீண்டும் கண்டறிய வேண்டும்.” என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்று அவர் புதுச்சேரி மாற்றத்திற்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார், சங்கமும் அதனை ஏற்று என்.ஓ.சி. கொடுத்துள்ளது.
தனக்கு சத்தீஸ்கர் நிர்வாகத்திற்குமான பிரச்சினை குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் கூறும்போது,
"வேறுபாடுகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது, ஐபிஎல் (IPL) சீசன் முடிந்த உடனேயே மாநிலச் சங்க அதிகாரிகளுடன் இது குறித்துப் பேச முயற்சித்தேன்; ஆனால், எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
"[2026] சத்தீஸ்கர் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் நான் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு அவர்களிடம் முறையான விளக்கம் இல்லை. மாநில அணிக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாமில் (conditioning camp) நான் ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் அவர்கள் எனக்குத் தெரிவிக்கவில்லை.
எனக்குச் சிறப்புச் சலுகை அளிக்க வேண்டும் என்று நான் கோரவில்லை; ஆனால், 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த உள்நாட்டு 'ஒயிட்-பால்' (white-ball) ஆல்-ரவுண்டருக்கான பிசிசிஐ (BCCI) விருதை வென்ற ஒரு வீரருக்கு, கேலி-கிண்டல்கள் அல்லாமல், குறைந்தபட்சம் தெளிவான விளக்கமாவது கிடைக்க வேண்டும்." என்று விமர்சனம் செய்த ஷஷாங்க் சிங் இப்போது புதுச்சேரியை ஒரு நல் வாய்ப்பாகத் தான் பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.