பாகிஸ்தான் சூப்பர் லீக் என்றாலே சர்ச்சைகளின் லீக் என்றாகிவிட்டது. நேற்று முதல் போட்டியிலேயே வெள்ளைப்பந்து பிங்க் நிறப் பந்தாக மாறிய விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதிய போட்டியில், சாதாரணமாக வெள்ளையாக இருக்கும் கிரிக்கெட் பந்து, ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பிங்க் நிறமாக மாறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு ஆஸ்திரேலிய பேட்டர் மார்னஸ் லபுஷேனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் பந்து நிறம் மாறியது குறித்து அம்பயர்களிடம் முறையிட்டார். அவரது விளக்கப்படி, அணியின் ஜெர்சியில் இருந்த நிறம் பந்தில் ஒட்டியதால், வெள்ளை பந்து மெதுவாக பிங்க் மற்றும் பின்னர் சிவப்பு நிறமாக மாறியது.
போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில்:
“இரண்டாவது ஓவருக்குப் பிறகே பந்து சிவப்பு மாதிரி தெரிய ஆரம்பித்தது. இது ஜெர்சியிலிருந்து வந்த நிறம் போல. நான் இதுபோன்ற விஷயத்தை முன்பு பார்த்ததில்லை,” என்றார். கிரிக்கெட்டில் பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்திருக்க வீரர்கள் ஜெர்சியில் தேய்ப்பது வழக்கமானது. ஆனால் ஜெர்சியிலிருந்து நேரடியாக நிறம் பந்துக்கு மாறுவது ஜெர்சியின் சாயம் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
லபுஷேன் மேலும் கூறிய போது, “சில சமயங்களில் பேட்டிலிருந்தோ, கால்காப்பிலிருந்தோ நிறம் பந்தில் ஒட்டும். இதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஜெர்சியின் நிறம் பந்தின் மீது படர்வதை இப்போதுதான் பார்க்கிறேன். இப்படி நடந்தது இதுதான் முதல் முறை. இதை விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
இந்த சர்ச்சைக்கிடையே, போட்டியில் லாகூர் அணி வெற்றி பெற்றது. இதை ஹைதராபாத் அணி, சமூக வலைதளத்தில் நகைச்சுவையாக பதிவொன்றை வெளியிட்டு கிண்டலடித்தது:
“PSL இன் முதல் ‘பிங்க்-பால்’ போட்டியில் வென்ற எதிரணிக்கு வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டது.